விவசாயிகளின் கருத்து கேட்புக்குப் பிறகே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்: ஆட்சியர் திட்டவட்டம்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளிடையே கருத்து கேட்ட பிறகே அத்திடம் செயல்படுத்தப்படும்
விவசாயிகளின் கருத்து கேட்புக்குப் பிறகே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்: ஆட்சியர் திட்டவட்டம்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளிடையே கருத்து கேட்ட பிறகே அத்திடம் செயல்படுத்தப்படும் என ஆட்சியர் பா.பொன்னையா விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உறுதியளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம், ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர், மதுராந்தகம், செய்யூர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலிருந்தும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில், பாலாற்றில் தடுப்பணை கட்டுதல், கரும்புக்கு கூலி, சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட மறுபரிசீலனை, ஏரிகள் தூர்வாருதல், குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளுதல், தொடக்க வோளண் கூட்டுறவு கடன் சங்க இடமாற்றம், தென்னை- எலுமிச்சை பயிரிடுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை, பயிர்க் காப்பீட்டுத் தொகை கோருதல், உரங்கள் வழங்கக் கோருதல், கறவை மாடு வாங்குவதற்கு கடன் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். 
இதைத் தொடர்ந்து, ஆட்சியர் பேசியது:
விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்து, பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் இக்குறைதீர்கூட்டம் நடத்தப்படுகிறது. பயிர்க் காப்பீட்டைப் பொறுத்த வரையில் கடந்த 2016, ஜனவரி முதல் டிசம்பர் வரை காப்பீட்டுத் தொகைக்கு பிரீமியம் செலுத்தியவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1,892 பேருக்கு வழங்கியது போக விடுபட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மேலும், ஈசூர், வள்ளிபுரம், உள்ளாவூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கருத்துரு இறுதிவடிவம் பெறும் வகையில், தடுப்பணை கட்டும் முழு விவரம், அதற்கு ஆகும் செலவு குறித்த விவரம் அனைத்தும் நிதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நிதித் துறையிடம் இருந்து நிதி ஒதுக்கும் பட்சத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் விரைந்து தொடங்கப்படும். அதேபோல், இதர 4 இடங்களிலும் தடுப்பணை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பொதுப்பணித்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். 
மேலும், சென்னையிலிருந்து சேலம் வரை 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நிலம் கையகப்படுத்தும்போது அரசு விதிமுறைகளைப் பின்பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். அதோடு, விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்படும். அதன்பிறகு, முறையாக 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர். 
விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 50 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டு, 20 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக குறை தீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர்கள் ஏ.வி.சுரேந்திரன், எம்.முத்துக்களுவன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) பொ.கோல்டி பிரேமாவதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதா பானுமதி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் என்.என்.தேவராஜன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com