மகளிர் தினம்: கருத்தரங்கம் தொடக்கம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 2 நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 2 நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. 
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் பாலின கல்வித்துறை சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு 'பாலின வளர்ச்சி' என்ற தலைப்பில் தொடங்கிய 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு பாலின கல்வித்துறைத் தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மையத்தின் பதிவாளர் சந்திரமோகன் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, தமிழக நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநர் சாமுவேல்செல்லையா, மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொகுப்புத் துறைத்தலைவர் கீதா இளங்கோவன் ஆகியோர் பேசினர். 
இதில், பத்திரிகை தகவல் தொகுப்புத் துறைத்தலைவர் பேசுகையில், பொது இடங்கள் மற்றும் பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே பெண்களின் முன்னேற்றம் தொடங்கும். பெண்களை தாயாகவும், சகோதரிகளாகவும் பாவித்து சமூகத்தில் அவர்கள் முன்னேறுவதற்கு ஆண்கள் உதவ வேண்டும் என்றார். இதையடுத்து பாலியம் குறித்து கல்லூரி மாணவர்களின் ஓவியம் மற்றும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. 
தொடர்ந்து, பாலின ஆய்வாளர் ரஞ்சனி 'பாலியம்-கொள்கைகளும் இலக்கும்' என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். இதனையடுத்து, 'அறிவோம் மூன்றாம் பாலினம்' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 140 பேர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை மையத்திற்கு வழங்கினர். வெள்ளிக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் கருந்தரங்கில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் உள்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com