மனுநீதி நாள் முகாமில் 171 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரத்தை அடுத்த கிதிரிப்பேட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி முகாமில் 171 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.

காஞ்சிபுரத்தை அடுத்த கிதிரிப்பேட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி முகாமில் 171 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்துக்குள்பட்ட கிதிரிபேட்டையில் ஆட்சியர் பொன்னையா தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமில், உள்ளாவூர், ஏகனாம்பேட்டை, ஆற்பாக்கம், மாகறல், வரதாபுரம், காலூர், பெரியநத்தம், பழைய சீவரம், கீழ்பெரமநல்லூர், அயிமிச்சேரி, சின்னவாக்கம், புத்தகரம், தம்மனூர், வில்லிவலம், கிதிரிப்பேட்டை, வெண்குடி, பூசிவாக்கம், திம்மராஜம்பேட்டை, தோணான்குளம், கீழ்ஒட்டிவாக்கம், சீயமங்கலம் காலனி, தேவிரியம்பாக்கம், வீரப்பராஜம்பேட்டை, நெய்குப்பம், ஆம்பாக்கம், நாயகன்பேட்டை, தென்னேரி, திருவெங்கரணை, அய்யன்பேட்டை, குருவிமலை, ஊத்துக்காடு, புதுப்பேட்டை, முத்தியால்பேட்டை, குண்ணவாக்கம், அகரம், நாயக்கன்குப்பம், இளையனார் வேலூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அதன்பிறகு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, நலிந்தோர் நிவாரண திட்ட உதவித் தொகை 54 பேருக்கும், 31 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 6 பேருக்கு ஆண்வாரிசு இல்லாச் சான்று, இருவருக்கு விதவைச் சான்று, 4 பேருக்கு வாரிசுச் சான்று, 7 பேருக்கு சிறு விவசாயி சான்று, 39 பேருக்கு இந்து இருளர் சான்று, 7 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனம், காதொலி கருவிகள் என மொத்தம் 171 பயனாளிகளுக்கு ரூ. 33.52 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். 
தொடர்ந்து, அவர் பேசியதாவது: இந்த முகாமுக்கு 15 நாள்களுக்கு முன்பு மனுக்கள் பெறப்பட்டன. அத்துடன், புதன்கிழமை பெறப்பட்ட மனுக்களையும் சேர்த்து, 24 மனுக்களைத் தவிர இதர மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. அவ்வகையில், நீர் ஆதாரத்துக்கு 2 கைப்பம்பு அமைத்தல், பள்ளிக் கட்டடத்துக்கு நிதி ஒதுக்குதல், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருள்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, கிதிரிப்பேட்டை ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை நிலையத்தை தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில், உத்தரமேரூர் எம்எல்ஏ சுந்தர், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், வருவாய் கோட்டாட்சியர் ராஜூ, தனித் துணை ஆட்சியர் சக்திவேல், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுந்தரராஜ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், ஆதிதிராவிடர் நலத் துறை தமிழ்செல்வி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com