ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி மருந்துக்குத் தட்டுப்பாடு

படப்பை, குன்றத்தூர், எழிச்சூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க் கடிக்கு மருந்து இருப்பு இல்லாததால்

படப்பை, குன்றத்தூர், எழிச்சூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க் கடிக்கு மருந்து இருப்பு இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் படப்பை, எழுச்சூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு பொது மருத்துவம், மகப்பேறு, அவசர முதலுதவி, குழந்தைகள் மருத்துவம், நாய்க்கடிக்கு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு படப்பை பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாளை நாய் கடித்துள்ளது.
இதையடுத்து, அவர் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு நாய் கடிக்கான மருந்துகள் இல்லை என நிலைய ஊழியர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அதேபோல் சேத்துப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பத்மவாதி, நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு, படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார். அவரும் மருந்து இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இதனால் இருவரும் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள குரோம்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தான் கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் இங்கு நாய் கடிக்குத் தேவையான மருந்துகள் இல்லாததால் அதிக செலவு செய்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நாய்க்கடி சிகிச்சைக்கான மருந்து வாங்குவதற்கான நிதி இல்லாததால் மருந்து வாங்க இயலவில்லை. ஏப்ரல் மாதம் முதல் நிலைமை சீராகும் என்றனர்.
சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள் தொகையுள்ள இந்த ஒன்றியப் பகுதி மக்களின் நலன் கருதி, நாய்க்கடி உள்ளிட்ட அடிப்படை சிகிச்சைக்கான மருந்து எந்நேரத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com