மீன்களின் இனப்பெருக்கம் : மரக்கிளைகளை நடுக்கடலுக்கு கொண்டு செல்லும் மீனவர்கள்

கடலில் வாழும் மீன்களின் உணவுக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் மரக்கிளைகளை கடலுக்கு நடுவில் கொண்டு சென்று போடும் பணிகளை மாமல்லபுரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

கடலில் வாழும் மீன்களின் உணவுக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் மரக்கிளைகளை கடலுக்கு நடுவில் கொண்டு சென்று போடும் பணிகளை மாமல்லபுரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீனவர்கள் கடலுக்குள் செல்ல அரசு மீன்பிடி தடைக் காலத்தை விதிக்கும். இந்த தடைக்காலம் ஏப்ரல் மாதத்தில் வரும். அந்த காலகட்டத்தில் மீனவர்கள் வலை பின்னுவது, படகுகளில் உள்ள பழுதுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். அதேபோல், அந்த காலகட்டம் வருதற்கு முன்பு மீன்களுக்கு இரையாக மரக்கிளைகளை படகுகள், விசைப் படகுகள் மூலம் கடலுக்கு நடுவில் கொண்டு சென்று போடும் பணியை மீனவர்கள் மேற்கொள்வர். இந்நிலையில் மரக்கிளைகளை கடலுக்குள் போடும் பணியினை மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீனிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காக அரசு ஏப்ரல் மாதம் மீன்பிடிக்க தடைவிதிக்கும். அப்படி தடைவிதிக்கும் போது, கருவேல மரக்கிளைகள், வேப்ப மரக் கிளைகள், அரச மரக் கிளைகள் என பெரிய பெரிய கிளைகளாக வெட்டி, விசைப்படகுகள் படகுகள் மூலம் கொண்டு சென்று கடலுக்கு நடுவே போட்டுவிட்டு வருவோம்.
இந்த கிளைகள் கடலில் கொஞ்சம்கொஞ்சமாக மக்கி மீன்களுக்கு உணவாக மாறும். அதனால் பிப்ரவரி மாதத்திலேயே கிளைகளைக் கொண்டு சென்று கடலுக்குள் போட்டுவிட்டு வருவோம். மேலும் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும்போது, மீன்களின் இனப்பெருக்கம் அதிகரித்திருக்கும். வலைகளை வீசும் போதே, அதில் இனப்பெருக்கம் செய்த மீன்களும் அதிக அளவில் கிடைக்கும்.
அதனால் இப்பணியினை ஆண்டுதோறும் மீனவர்கள் தலையாயப் பணியாக மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com