27ஆவது நினைவு நாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மலர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் திங்கள்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் திங்கள்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் 27ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா, முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ஜே.எம்.ஆரூண், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பாபி ராஜு, எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார் (நாங்குநேரி), கணேஷ் (ஊட்டி), காளிமுத்து (தாராபுரம்), ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினர் முருகானந்தம், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, பிரகாசம், மாவட்டத் தலைவர்கள் ரூபி மனோகரன், மதியழகன், சுந்தரமூர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் அருள்ராஜ், முன்னாள் கவுன்சிலர் பி.வி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி: முன்னதாக, திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதற்கு முன், கர்நாடக காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் தொண்டர்கள் தங்கள் மாநிலத்தில் இருந்து எடுத்து வந்த ஜோதியை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வைத்தனர்.
டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்': ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியது: உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
இதன் மூலம் மக்களின் பணத்தை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. மக்களின் இன்னலைப் போக்க பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து வரும் 24-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி, பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
ரத்த தான முகாம்: இதனிடையே, ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அந்த அணியின் மாநிலத் தலைவர்
ஜே.எம்.எச்.ஹசன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். முகாமில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில்குமார், ஜாஃபர், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com