தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி சிஐடியு காத்திருப்புப் போராட்டம்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யமஹா, ராயல் என்ஃபீல்டு, எம்எஸ்ஐ நிறுவனங்களின் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யமஹா, ராயல் என்ஃபீல்டு, எம்எஸ்ஐ நிறுவனங்களின் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி சிஐடியு சார்பில் இருங்காட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
 காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் யமஹா, ராயல் என்ஃபீல்டு மற்றும் மண்ணூர் பகுதியில் இயங்கி வரும் எம்எஸ்ஐ ஆகிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 45 நாள்களுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்நிலையில் இப்பிரச்னையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி யமஹா, எம்எஸ்ஐ, ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் சிஐடியு மற்றும் உழைக்கும் மக்கள் மாமன்றம் சார்பில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., சிஐடியு மாநிலத் தலைவர் அ.செüந்தர்ராஜன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் நிர்வாகி ஆர்.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் விமலநாதன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.செüந்தரராஜன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 இந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை வாழ்த்தி டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசியது:
 தமிழக முதல்வரிடம் இதுகுறித்துப் பேசியுள்ளேன். மூன்று தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 நம் நாட்டில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லையா? என்று முதல்வரிடம் கேட்டேன். அதற்கு, "உரிமை இருக்கிறது' என அவர் ஒப்புக்கொண்டார். "சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டா?' என்று கேட்டதற்கு "அதற்கு உரிமை இல்லை' என்றார்.
 இப்பிரச்சனையில் முதல்வர் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். யமஹா நிறுவனத்தில் இரண்டு பேரை பணிநீக்கம் செய்திருப்பது ஒரு மிரட்டலாகும். இரண்டு பேரை பணிநீக்கம் செய்தால் தொழிலாளர்கள் பயப்படுவார்கள் என நிர்வாகம் நினைக்கிறது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
 தொழிற்சங்கம் அமைக்க உரிமை உள்ள நம் நாட்டில் அச்சங்கத்தை அமைக்க வேண்டாம் எனச் சொல்ல ஜப்பான் நிறுவன நிர்வாகத்திற்கு எப்படி உரிமை வந்தது? ஜப்பானிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரிவு 28-இன்கீழ் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொள்ள உரிமை உண்டு. ஜப்பானில் உரிமை உண்டு என்றால் நம் நாட்டில் இல்லையா?
 சங்கம் வைத்துத் தொழிலாளர்களைத் திரட்டி பேச்சுவார்த்தை நடத்தவும் ஜப்பானிய சட்டம் உரிமை தருகிறது. அப்படியானால் சங்கம் அமைப்பது நம் நாட்டிலும், ஜப்பானிலும் சட்டவிரோதமானது அல்ல. மேலும் ஜப்பானிய நட்டு சட்டமானது "இந்தச் சங்கம் அந்தச் சங்கம் என்று பிரித்துப் பார்ப்பதும் குற்றம். பிரித்துப் பார்ப்பது மட்டுமின்றி பழிவாங்குவதும் சட்டவிரோதம்' என்கிறது.
 இப்படி சட்டம் இருக்க, நாம் போராடுவது சட்டவிரோதமல்ல. இன்று உங்கள் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது. அமைதியாகப் போராடுவோம். நியாயமான ஒப்பந்தத்தைப் பெற தயாராக இருப்போம். மேலும் நம் நாட்டு வெளியுறவுத்துறை மூலம் ஜப்பான் நாட்டு அரசிடமும் பேசுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com