இளைஞர் கொலை வழக்கு: 5 பேர் கைது

மாமல்லபுரம் அருகே இளைஞர் ஒருவரின் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவி தன்னை பாலியல் புகாரில் சிறைக்கு

மாமல்லபுரம் அருகே இளைஞர் ஒருவரின் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவி தன்னை பாலியல் புகாரில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் என்பவர், மனைவியின் தம்பியைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டி திருவிடந்தை சாலையோரத்தில் சில தினங்களுக்கு முன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் கொலையுண்டு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியாத நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரிய வந்தது. அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
 இந்தக் கொலை வழக்கை விசாரிக்க மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ் மேற்பார்வையில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், தாழம்பூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம், துணை ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் புதுச்சேரி, நெய்வேலி ஆகிய இடங்களில் இக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடிவந்தனர்.
 இந்நிலையில், கொலையில் தொடர்புடைய 5 பேரில் 4 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெயராமன் என்ற அந்த நபர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
 கொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷின் பெரியம்மா மகள் இந்திரா என்கிற சுந்தரவல்லி தன் கணவரை பிரிந்து புதுச்சேரியை அடுத்த ரெட்டியார்பாளையத்தில் வசித்து வருகிறார். அவருக்கு நிவேதா (13) அபிநயா (14) என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை இந்திரா 2-ஆவது திருமணம் செய்து கொண்டார். மோகன்ராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஜூலி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
 எனினும், மோகன்ராஜ் அதே பகுதியில் உள்ள தனது வீட்டிற்குப் போகாமல் இந்திராவுடன் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே, இந்திரா வெளியே செல்லும் நேரங்களில் அவரது மகள்களான நிவேதாவுக்கும், அபிநயாவுக்கும் மோகன்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை அறிந்த இந்திரா இது தொடர்பாக மோகன்ராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அவரைக் கைது செய்து காலாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
 அதன் பின் ஒரு மாதம் கழித்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மோகன்ராஜ் தன்னை சிறைக்கு அனுப்ப இந்திராவுக்கு உறுதுணையாக இருந்த அவரது தம்பி அருண்பிரகாஷை தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, புதுச்சேரியில் இருந்த தனது நண்பர்கள் சிவசங்கரன்(27), மதியரசன் (24), முகிலன் (23), ஜெயராமன் (26) ஆகியோருடன் சில தினங்களுக்கு முன் அவர் காரில் மாமல்லபுரத்திற்கு வந்தார். அருகில் உள்ள கோவளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து அவர்கள் தங்கினர்.
 அதன் பிறகு கோவளத்தில் இருந்து மோகன்ராஜ் செல்லிடப்பேசியில் அருண்பிரகாஷைத் தொடர்புகொண்டு, மது அருந்த அழைத்தார். தாம் வண்டலூரில் காத்திருப்பதாக அருண்பிரகாஷ் கூறியதையடுத்து மதியரசன் தனது காரில் வண்டலூர் சென்று அவரை அழைத்து வந்தார். கோவளம் அருகில் உள்ள திருவிடந்தை சவுக்குத் தோப்பில் அருண்பிரகாஷ், மோகன்ராஜ், சிவசங்கரன், முகிலன், ஜெயராமன், மதியரசன்ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் அருண்பிரகாஷின் காலை மோகன்ராஜ், முகிலன்ஆகியோரும், அவரது கைகளை ஜெயராமனும் முகிலனும் பிடித்துக் கொண்டனர். சிவசங்கரனும், மோகன்ராஜும் அருண்பிரகாஷின் தலையில் கல்லைப் போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு அனைவரும் காரில் ஏறித் தப்பி விட்டனர்.
 இந்நிலையில், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜெயராமனிடம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மோகன்ராஜ், சிவசங்கரன், முகிலன், மதியரசன் ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அடுத்தகட்டமாக சரணடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மாமல்லபுரம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com