டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்களை அக்.24-க்குள் அழிக்க வேண்டும்: ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு

மாவட்டம் முழுவதும் உள்ள டெங்கு கொசுக்களின் உற்பத்தி ஆதாரங்களை வரும் 24-ஆம் தேதிக்குள் அழிக்க வேண்டும் என ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டம் முழுவதும் உள்ள டெங்கு கொசுக்களின் உற்பத்தி ஆதாரங்களை வரும் 24-ஆம் தேதிக்குள் அழிக்க வேண்டும் என ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உத்தரவிட்டுள்ளார்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு, வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா முன்னிலை வகித்தார். இதில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் செயல்பாடு, விழிப்புணர்வு குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அதோடு, டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 தமிழக முதல்வர் தலைமையில் அண்மையில் டெங்கு, வடகிழக்குப் பருவமழை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில், கடந்த ஆண்டின் அனுபவத்தின் வாயிலாக, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் ஆய்வு நடத்தினோம். அதன்பேரில், கூடுதலாக காய்ச்சல் பாதிப்பு இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
 சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது மாவட்டங்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்க 300 வீடுகளுக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, வடகிழக்குப் பருவமழை குறித்து முதல் தகவல் அளிப்போராக 30, 679 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மாவட்ட ஆட்சியர் தலை மையில் வரும் 24-ஆம் தேதிக்குள் வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கான ஆதாரங்களை அழிக்க வேண்டும். அதன் பிறகு, டெங்கு கொசு உற்பத்தியாகக் காரணமாக இருக்கும் வீடுகள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
 இதைத் தொடர்ந்து, கூடுதல் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வுக் கண்காட்சியை பார்வையிட்டார்.
 இதில், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா, மகளிர் திட்ட அலுவலர் சீனிவாச ராவ், அரசுத்துறை அலுவலர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com