பன்னாட்டு நிறுவன சலுகைகளை ரத்து செய்யக் கோரி : அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பன்னாட்டு நிறுவனச் சலுகைகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பன்னாட்டு நிறுவன சலுகைகளை ரத்து செய்யக் கோரி : அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பன்னாட்டு நிறுவனச் சலுகைகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் யமஹா, எம்எஸ்ஐ, ராயல் என்பீல்டு, கிரௌன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதக்கணக்கில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு அறிவுரைகளைத் தொழிற்சாலை நிறுனங்களுக்கு வழங்கியுள்ளது. 
எனினும், அரசின் அறிவுரைகளை அந்த நிறுவனங்கள் ஏற்காமல், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர், யமஹா உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன், எல்பிஎஃப் மாவட்டத் தலைவர் சுந்தரவரதன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து, நம் நாட்டுச் சட்டங்களை மதிக்காமல் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை ரத்து செய்யவேண்டும்; டாங்கஸன், அனிவல், கனிஷ் கோல்டு, ஃபாக்ஸ்கான் ஆகிய ஆலைகள் மூடப்பட்டதால் வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; ஒப்பந்த முறைகளை ரத்து செய்ய வேண்டும்; போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியத்தில் சேர்த்து வைத்த பிடித்தம் செய்த தொகையினை வழங்க வேண்டும்; மின்வாரியத்தில் மின்சாரம் வாங்குதல் - வழங்குதலில் நடைபெற்றுள்ள ஊழலை விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷமிட்டனர். 
மேற்கண்ட கோரிக்கைகளை, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், எல்பிஎப் மாவட்டத் தலைவர்கள் செ.சுந்தரவரதன், கே.எ.இளங்கோவன், ஏஐடியுசி மாநில செயலாளர் சொ.இரணியப்பன் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். தொடர்ந்து, சிஐடியு மாநிலத் தலைவர் அ.செளந்தரராஜன் நிறைவுரையாற்றினார். இதில் திரளான யமஹா உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com