பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் காஞ்சிபுரத்தி ல் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் காஞ்சிபுரத்தி ல் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து செப்டம்பர் 10ஆம் தேதியன்று ஒருநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் காந்தி சாலை தேரடியில் இருந்து திரளான கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மேகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முத்துக்குமார், சங்கர் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக மூங்கில் மண்டபம் பகுதியை நோக்கிச் சென்றனர். 
அப்போது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 
இதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது, போலீஸாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். 
அதேபோல், உத்தரமேரூரில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திரளான கட்சியினர் ஒன்றுகூடி, சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்று மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர். 
போராட்டங்களால் வருவாய் இழப்பு
பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, திங்கள்கிழமை சுமார் 40 சதவீத கடைகளே மூடப்பட்டிருந்தன. எனினும், அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதுகுறித்து வணிகர்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தாலும், நகரில் அடிக்கடி பல்வேறு போராட்டம் நடத்தப்படுகின்றன. 
இதனால், கட்சிகள் அழைப்பு விடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிக்க முடிவதில்லை. 
மேலும்,அவ்வப்போது கடைகள் மூடப்படுவதால், வர்த்தகம் வெகுவாக பாதிப்படைந்து, வருவாய் இழப்பு ஏற்படுகிறது' என்றனர். 
ஸ்ரீபெரும்புதூரில்...
 பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாறு காணாத பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் சார்பாக திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
இந்நிலையில், பெட்ரோல்- டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பாக கட்சியின் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து நகர பேருந்து நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில்..
 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய, மாநில அரசுகளைக்கண்டித்தும் செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தப் பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
முழு அடைப்பு என அறிவிக்கப்பட்டதை அடுத்து காலை10 மணி வரை ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. 10.30 மணிக்கு மேல் 50 , 60 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ், திமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், திமுக நகர செயலாளர் நரேந்திரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கை இரா.தமிழரசன், ரவி, சண்முகம் காங்கிரஸ் நகர பொறுப்பாளர்கள்ஜே.பாஸ்கர், ஆர்.குமரவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் கைது செய்த போலீஸார், தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த பேருந்தில் ஏற்றி, தனியார் திருமணமண்டபத்தில் காவலில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர். 
இதேபோல், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் காவலில் வைத்திருந்த போலீஸார், அவர்களை மாலையில் விடுவித்தனர். இப்பகுதிகளில் காலையில் இருந்து மதியம் வரை 50 சதவீதக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பிற்பகலில் 90 சதவீதக் கடைகள் திறக்கப்பட்டிருந்ன. பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதுராந்தகத்தில்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மதுராந்தகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மதுராந்தகம், செய்யூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீத வணிக நிறுவனங்கள் மூடியிருந்தன. சிறு பெட்டிக் கடைகள், காய்கறிக் கடைகள் ஆகியவை திறந்திருந்தன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் கே.வாசுதேவன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்ûம்யை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள். 
இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட உறுப்பினர்கள் டி.கிருஷ்ணராஜ், பி.மாசிலாமணி, எஸ்.ராஜா, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகி சோமசுந்தரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள்,139 ஆண்கள் உள்ளிட்டோரை நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com