சுங்கச் சாவடி கட்டணம்: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

தொழுபேடு சுங்கச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும்,

தொழுபேடு சுங்கச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் சனிக்கிழமை மாலை ஆர்பாட்டம் நடத்தினர்.
 மதுராந்தகத்தை அடுத்த தொழுபேட்டில் சுங்கச் சாவடி உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்சமயம் புதிய நபர் ஒருவர் இங்கு கட்டண வசூல் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளார்.
 இதனால் தொழுபேடு அருகில் சமத்துவபுரம், ஆத்தூர், மின்னல் சித்தாமூர், கீழ் அத்திவாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர் இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும்போது கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
 மேலும், பள்ளி வாகனங்கள், மினிவேன்கள் போன்றவற்றைக் கொண்டு செல்லும்போது வலுக்கட்டாயமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை விடுத்தபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 இதனால் கிராம இளைஞர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த் தகராறு ஏற்பட்டு வந்தது.
 சுங்கச்சாவடிக்கு மிக அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எந்தக் காரணத்தை கொண்டும் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் சனிக்கிழமை மாலை சுங்கச்சாவடிக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் பதற்றமாக இருந்தது.
 இது குறித்த தகவலை அறிந்து அச்சிறுப்பாக்கம் போலீஸார் வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "கோரிக்கை பற்றி எழுத்துமூலமாக புகார் அளிக்க வேண்டும். காவல்துறை அதிகாரி மூலம் மிக விரைவில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்' என போலீஸார் உறுதி அளித்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com