வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள் : அலுவலர்கள், பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா
வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள் : அலுவலர்கள், பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை


வடகிழக்குப் பருவமழை வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்த மாவட்டத்தில், காஞ்சிபுரம், தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், சேலையூர், திருவஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாக ஆட்சியர் பா.பொன்னையா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் பேசியது:
பொதுப் பணித் துறை, உள்ளாட்சி, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், குன்றத்தூர், பீர்க்கன்கரணை, கம்பராஜபுரம், அமுதம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள், கழிவுநீர் ஓடைகள், உபரிநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் ஏரிகள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, புதிதாக உபரி நீர் போக்கிகள், மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய மதகுகள் சீர்செய்யப்பட்டுள்ளன. வெள்ளம், புயல் ஆகியவை ஏற்படும்போது முதலில் தகவல் அளிப்போரின் தகவலைப் பொறுத்து, அந்தந்த பகுதிகளில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அதன்பேரில், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும், உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்து பாதிப்பிலிருந்து மீட்பதற்கு துணைபுரியவும் வேண்டும். மேலும், முதலில் தகவல் அளிப்பவர்களுக்கு இது தொடர்பாக தேவையான பயிற்சி அளிக்கப்படும். 
அதிகமாக பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முதலில் தகவல் அளிப்போரை அமர்த்த வேண்டும். அவர்கள் எந்த நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும். வெள்ள பாதிப்புகளுக்கென மாவட்ட அளவில் நகராட்சி ஆணையர்கள், பேருராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தலைமையில் 11 துறை அலுவலர்கள் அடங்கிய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வட்டத்துக்கு ஒரு துணை ஆட்சியர் தலைமையில் குழுக்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கையாக மீட்பு வாகனங்கள், மணல் மூட்டைகள், சவுக்குக் கட்டைகள், பொக்லைன் வாகனங்கள், பவர் ஸா, ஜெனரேட்டர் ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அவை போதிய அளவுக்கு உள்ளனவா என உரிய அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். 
அதேபோல், நிவாரண முகாம்கள் மற்றும் புயல் நிவாரண மையங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும். 
சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, அத்தியாவசிய மருந்துப் பொருள்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும் வேண்டும். காவல்துறையினர் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் போக்குவரத்தை சரிசெய்ய மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும். மின்சார வாரியத்தினர் மின்வழித் தடங்களை சரிபார்த்து, பழுதான மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். தீயணைப்புத் துறையினர் உயிர்ப் பாதுகாப்பு உடைகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மீட்பதற்குத் தேவையான தளவாடங்களுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர். 
அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாலாஜாபாத், திருப்போரூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு, பொதுமக்கள் தெரிவித்துள்ளபடி, போக்குவரத்து நெரிசல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக சில பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. அவை, மழைக் காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்கப்படும். மேலும், நிலுவையில் உள்ள வெள்ள பாதிப்பு தடுப்பு தொடர்பான அனைத்துப் பணிகளையும் விரைவாக நிறைவேற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். 
இது தவிர, கழிவுநீர்க் கால்வாய்களில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளால் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் இதை உணர்ந்து மழைநீர் வடியும் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டாமலும், அடைப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com