கோடையில் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
மேலும், மின்சாரம் வரும் போது குறைந்த அழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம், தோக்கமூர், பூவலை, எகுமதுரை உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது மின்சாரம் தடைபடுகிறது.
மேலும், மின்சாரம் வந்தாலும் குறைந்த அழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது. இதனால், ஏராளமானோரின் வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்துள்ளன.
தற்போது கோடைகாலமாக இருப்பதால், பகல் நேரங்களில் சுமார் 110 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. மேலும், இரவு நேரத்திலும் அனலாகவும், புழுக்கமாகவும் இருக்கிறது.
இந்நிலையில், குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின் விசிறிகள் மெதுவாக சுற்றுகின்றன. குளிர்சாதனங்களும் வேலை செய்யவில்லை. இதனால், பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகள் தூக்கமின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் காற்றோட்டத்துக்காக கதவை திறந்து வைத்தால், திருட்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால், வீட்டுக்கு வெளியே தூங்கக் கூட பொதுமக்கள் பயப்படுகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் குளிர்பானக் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. மின் தடை, குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்சார வாரியத்தினர் பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, தடையற்ற, சீரான மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com