ஆந்திர போலீஸாரை தாக்கி கைதியை மீட்டுச் சென்ற மர்ம கும்பல்

திருத்தணியில் ஆந்திர போலீஸாரை தாக்கி, கைதியை மீட்டுக் கொண்டு, 20 பேர் கொண்ட மர்ம கும்பல் சனிக்கிழமை தப்பிச் சென்றது.

திருத்தணியில் ஆந்திர போலீஸாரை தாக்கி, கைதியை மீட்டுக் கொண்டு, 20 பேர் கொண்ட மர்ம கும்பல் சனிக்கிழமை தப்பிச் சென்றது.
ஆந்திர மாநிலம், குருஜல நீதிமன்றத்தில் நடந்துவரும் மோசடி வழக்கு ஒன்றில் தொடர்புடைய மதன் ரெட்டியை (45), கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என பிடுகுரல்லா போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் குருவராஜபேட்டையை அடுத்த பெருமாள்ராஜி பேட்டையில் மதன்ரெட்டி பதுங்கியிருப்பதாக ஆந்திர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பிடுகுரல்லா தலைமை காவலர் சாம்சன், போலீஸார் வெங்கடேசலு, கஜவாரி, பி. வெங்கடேசலு ஆகிய நான்கு பேரும் சனிக்கிழமை மாலை பெருமாள்ராஜிபேட்டைக்கு வந்தனர். அங்கு மதன்ரெட்டியை கைது செய்து, காரில் திருத்தணி வழியாக, ஆந்திரத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
திருத்தணி புறவழிச்சாலையில் வந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் போலீஸாரின் காரை மறித்து, தாக்கியது. இதில், காரின் கண்ணாடி உடைந்தது. மேலும், ஆந்திர போலீஸார் மீது மதுபாட்டில்களை வீசி தாக்கினர். பின்னர், மதன்ரெட்டியை போலீஸாரின் பிடியில் இருந்து மீட்டு, மர்ம கும்பல் தப்பி சென்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பி.வெங்கடேசலு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சாம்சன் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் போலீஸாரை தாக்கி, மர்ம கும்பல் கைதியை மீட்டுச் சென்ற சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com