10,700 விவசாயிகளுக்கு ரூ.18.15 கோடி இழப்பீட்டுத் தொகை: ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2015-16-ஆம் ஆண்டில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10,700 விவசாயிகளுக்கு ரூ.18.15 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2015-16-ஆம் ஆண்டில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10,700 விவசாயிகளுக்கு ரூ.18.15 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் எ.சுந்தரவல்லி பேசியதாவது:
மாவட்டத்தில் இதுவரை சொர்ணவாரி பருவத்தில் நெற் பயிரில் 22,333 ஹெக்டேரும், திருந்திய நெற்பயிரில் 14,892 ஹெக்டேரும், சிறுதானியங்கள் 661 ஹெக்டேரும், பயறுவகைகள் 273 ஹெக்டேரும், எண்ணெய் வித்துக்கள் 1,001 ஹெக்டேரும், கரும்பு நடவு 345 ஹெக்டேரும், மறுதாம்பு 4,852 ஹெக்டேரும் பயிரிடப்பட்டுள்ளன.
நடப்பு மாதம் முடிய நிகர பயிர் சாகுபடி பரப்பு 29,465 ஹெக்டேர் ஆகும். கடந்த 2015-16-ஆம் ஆண்டு தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்த 10,700 விவசாயிகளுக்கு ரூ.18.15 கோடி இழப்பீட்டுத் தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2016-17-ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்தவர்களில் பாதிக்கப்பட்ட 13,597 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு ரூ. 17.06 கோடி பெறப்பட்டுள்ளது. இதில், ரூ.14.68 கோடி, 12,680 விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நேரடி உர மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களில் விற்பனை முனையக்கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
இக்கூட்டத்தில், இறால் மற்றும் வண்ண மீன் பண்ணைகளை அகற்ற வேண்டும். நீர் ஆதாரங்களான ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பட்டா மாற்றம், தடுப்பணை கட்டுதல், ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் பெறப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளிடமிருந்து ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, உதவி ஆட்சியர் (பயிற்சி) பவன்குமார்
க.கிரியப்பனவர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தமிழ்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com