கன மழையால் இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கூடம்: மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு

திருவள்ளூர் அருகே கன மழையால் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழக்கூடிய அபாயம் ஏற்பட்டதால், மாணவர்களை அமர வைக்க மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. 
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழை நீர் ஒழுகிய வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவ, மாணவிகள்.
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழை நீர் ஒழுகிய வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவ, மாணவிகள்.

திருவள்ளூர் அருகே கன மழையால் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழக்கூடிய அபாயம் ஏற்பட்டதால், மாணவர்களை அமர வைக்க மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. 
பூண்டியை அடுத்த மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் 167 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. இக்கட்டடம் சுமார் 50 ஆண்டுகள் பழைமையானதாகும். 
இந்நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கிய கன மழையால் கட்டடம் மழை நீரால் ஓதம் ஏறியதோடு, மேற்கூரைவழியாக மழை நீர் ஒழுகியது. இதேபோல், தலைமையாசிரியர் அறை, சத்துணவு சமைக்கும் அறை, சாப்பிடும் அறைகளும் மழையால் ஒழுகின. இதனால், மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
மாற்று இடம் ஏற்பாடு: இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ராஜூ மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பூண்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ரங்கனுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரங்கன் விரைந்து வந்து, ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களுடன் ஆலோசனை செய்தார். 
அதைத் தொடர்ந்து, தாற்காலிகமாக கிராம சேவை மைய வளாகத்திற்கு 3,4,5 ஆகிய வகுப்புகளை மாற்றலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். உடனே மாணவ, மாணவிகளை புதிதாக அமைக்கப்பட்ட கிராம சேவை மைய வளாகத்திற்கு மாற்றம் செய்து அமரவைத்தனர். 
இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த விஜய் கூறியதாவது: இப்பள்ளி வளாகம் மழை பெய்தால் சுவர் ஈரமாகி விடுகிறது. ஓடுகள் சரியில்லாததால் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாமல் பாதிக்கும் சூழ்நிலையிருக்கிறது. இப்பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டடம் அமைக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மேல் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம் . ஆனால் , இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். 
இதுகுறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரங்கன் கூறியதாவது: மழை நீர் ஒழுகிய வகுப்பறையில் இருந்து தாற்காலிகமாக கிராம சேவை மைய வளாகத்திற்கு 3 வகுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே இப்பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தெரிவித்துள்ளோம். அதனால், ஒன்றிய அதிகாரிகள் விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனே கட்டடம் புதுப்பிக்கப்படவுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com