ஆள் பற்றாக்குறையைத் தவிர்க்க பெண்களுக்கு கட்டுமானப் பயிற்சி: ஆட்சியர்

ஆள் பற்றாக்குறையைத் தவிர்க்க பெண்களுக்கு கட்டுமானப் பயிற்சி: ஆட்சியர்

கிராமங்களில் தனிநபர் சுகாதார வளாகப் பணிக்கான ஆள்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டுமானப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக

கிராமங்களில் தனிநபர் சுகாதார வளாகப் பணிக்கான ஆள்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டுமானப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் முழு சுகாதாரத்தை ஏற்படுத்தும் வகையில், தூய்மை பாரத திட்டம் மூலம் 526 ஊராட்சிகளிலும், தனிநபர் சுகாதார வளாகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், இம்மாவட்டத்தில் 321 ஊராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 2018-க்குள் 205 கிராம ஊராட்சிகளிலும் இதேபோல் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக 90 ஆயிரம் கழிப்பறைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து கிராமங்களில் ஆள்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டுமானப் பயிற்சி அளித்து, தனிநபர் கழிப்பறைகள் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான கட்டுமானப் பயிற்சி முகாம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முகாமை ஆட்சியர் எ.சுந்தரவல்லி தொடங்கி வைத்துப் பேசியதாவது: தூய்மை பாரத இயக்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தை திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற சுகாதார மாவட்டமாக உருவாக்க 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இப்பணிக்கு கிராமங்களில் ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் இப்பணியில் பெண்களுக்கும் பயிற்சி அளித்து, அதன் மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் கட்டுமானப் பணியில் ஈடுபட ஆர்வமுள்ள பெண்களைத் தேர்வு செய்து, மாவட்ட அளவிலான ஒரு நாள் கட்டுமானப் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ச.சா.குமார், மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலர் ச.ராஜகோபாலன், உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், உதவிப் பொறியாளர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com