அடிப்படை வசதிகளின்றி செயல்படும் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம்

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள்
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயன்படாத நிலையில் உள்ள கழிப்பறை.
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயன்படாத நிலையில் உள்ள கழிப்பறை.

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இவற்றை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் வட்டத்தில் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, கருங்குழி பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இங்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான நிலப் பட்டா, நிலத்தை சர்வே செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகக் கட்டடம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி நகருக்கு வெளியே அமைந்துள்ளது.
அச்சிறுப்பாக்கம், கருங்குழி, கிணார், வெள்ளபுத்தூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தேவைகளுக்கு மதுராந்தகம் நகருக்கு சுமார் 1 கி.மீ. தொலைவில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகின்றனர். இந்நிலையில் அலுவலகத்தின் முன்புறம் குடிநீர் வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் குடிநீர் இருப்பதில்லை. ஆண், பெண் இரு பாலருக்கும் கழிப்பறைகள் இருந்தும் அங்கு போதிய தண்ணீர் இல்லாததால் அதனை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை.
இங்கு அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல மதுராந்தகம் அரசுப் போக்குவரத்து பணிமனை மேலாளருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அலுவலகத்தில் இ சேவை மையம் மூலம் இணையவழியில் பிறப்பு, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற பதிவுக்காக வருவோர் காலை 9 மணிக்குள் வரும் 50 நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுகிறது.
சிறிது காலதாமதமாக வருவோரை மறுநாள் வரும்படி கூறி அனுப்பி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.
இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com