போலீஸ் பாதுகாப்புடன் ஆதிதிராவிடர் விடுதி கட்டுமானப் பணி தொடக்கம்

பல்வேறு எதிர்ப்பு, ஆதரவு போராட்டங்களால், கும்மிடிப்பூண்டி ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டுமானப் பணி 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
கும்மிடிப்பூண்டியில் ஆதிதிராவிடர் விடுதி கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி, முற்றுகையிட்ட பெண்கள்.
கும்மிடிப்பூண்டியில் ஆதிதிராவிடர் விடுதி கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி, முற்றுகையிட்ட பெண்கள்.

பல்வேறு எதிர்ப்பு, ஆதரவு போராட்டங்களால், கும்மிடிப்பூண்டி ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டுமானப் பணி 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் விடுதி கட்டுமானப் பணி அண்மையில் தொடங்கியது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சாமிரெட்டி கண்டிகையில் 1972-ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விடுதி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை 65 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதிக்கு அரசு சார்பில் சொந்தமாக கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அரசு இடம் 18 சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடம் 2004-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தாட்கோ மூலம் 2006-ஆம் ஆண்டு விடுதிக்கான கட்டடம் கட்ட ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த விடுதி கட்டும் பணி தடைபட்டது. இவ்வாறு, மூன்று முறை நிதி ஒதுக்கியும், விடுதி கட்டும் பணி தடைபட்டது.
இதைத்தொடர்ந்து தற்போதைய நிதி ஆண்டில் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் விடுதி கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதி கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த இடத்தில் கோயில் திருவிழாக்கள், பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும், அங்கு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டக் கூடாது எனவும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இதேபோல், அதே இடத்தில் ஆதிதிராவிடர் விடுதியைக் கட்ட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ராஜன், காவல் ஆய்வாளர் சுடலைமணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடுதி கட்டுமானப் பணி அண்மையில் தொடங்கியது.
அப்போது அப்பகுதி மக்கள் விடுதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் விடுதி கட்டப்பட்டால், தங்களது ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைப்போம் எனக்கூறி, கட்டுமானப் பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ராஜகோபால், அங்கு வந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடுதியின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com