விளை நிலங்களில் அனுமதியின்றி இயங்கும் இறால் பண்ணைகளை அகற்ற குழு அமைப்பு: ஆட்சியர் தகவல்

விளை நிலங்களில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார்.

விளை நிலங்களில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் இதுவரை சொர்ணவாரி பருவத்தில் நெற் பயிரில் 1,420 ஹெக்டேரும், திருந்திய நெற்பயிரில் 820 ஹெக்டேரும், எண்ணைய் வித்துக்கள் 19 ஹெக்டேரும், கரும்பு நடவு 37 ஹெக்டேரும், மறுதாம்பு 1,561 ஹெக்டேரும் பயிரிடப்பட்டுள்ளன.
நடப்பு மாதம் வரை நிகர பயிர் சாகுபடி 3,037 ஹெக்டேர் ஆகும். 2016-17-இல் 10,697 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
 பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.2.72 லட்சம் பிரீமியத்தொகை காப்பீடு நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது.  
 பயிர் காப்பீடு திட்டத்தில் 31,367 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். காப்பீடு நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி  அளிக்கப்படுகிறது. கால்நடை தீவனமான "அசோலா' உற்பத்தி செய்ய கருவிகள் வாங்க முழு மானியம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விவசாய நிலங்களில் இயங்கி வரும் இறால் மற்றும் வண்ண மீன் பண்ணைகளை அகற்றுவது தொடர்பாக விவசாயத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் அறிக்கை பெறப்பட்டவுடன் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ்ஜோகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் வி.பி.தண்டபாணி, கோட்டாட்சியர்கள் திவ்யஸ்ரீ, விமல்ராஜ், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com