குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
By DIN | Published on : 21st May 2017 12:36 AM | அ+அ அ- |
சென்னை மாதவரத்தில் குடிநீர் கேட்டு, சனிக்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் 27, 30-ஆவது வார்டு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பகுதிகளில் லாரிகள் மூலம் தெருக்களில் உள்ள தொட்டியில் நீர் நிரப்பி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பெண்கள், மாதவரம் பேருந்து நிலையத்தில் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை குடிநீர் வாரிய அலுவலர் பெண்களை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த, மாதவரம் காவல் ஆய்வாளர் சங்கர், முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, மண்டலக் குழு முன்னாள் தலைவர் வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர் கண்ணதாசன் உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், அவற்றிற்கு மூடிகளை அமைத்தல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.