டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மறியல்

அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்டது, பூசாலிமேடு. இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கல் போலீஸார், வருவாய்த்துறையினர் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், மதுபானக் கடை முன் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
அப்போது, போலீஸார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை அகற்றுவதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இச்சம்பவத்தால், திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி, மே 25: கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை, அதிகாரிகள் பூசாலிமேடு பகுதிக்கு மாற்றினர்.
குடியிருப்புகள், நெடுஞ்சாலையை ஒட்டி டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டதால் அதனை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 17-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்த கடை அகற்றப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து 2 நாள்கள் கழித்து, மீண்டும் கடையை திறந்து மது விற்பனையை ஆரம்பித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மேற்கண்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி தாமரைப்பாக்கம்-ஆவடி சாலையில் மறியலில்
ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. மாணிக்கவேல், வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரம்யா உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கும் வரை, டாஸ்மாக் கடையை மூடி வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
இதனால், தாமரைப்பாக்கம்-ஆவடி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com