மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஜெ.நாராயணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜெ.கார்குழலி முன்னிலை வகித்தார்.
முதல் நாளான வெள்ளிக்கிழமை திருவள்ளூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
அவர்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டில் திருத்தம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூர் 17, 18-ஆவது வார்டுகளில் பல ஆண்டுகளாக வசிக்கும் 65 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, முன்னாள் கவுன்சிலர்கள் தாமஸ் ராஜ்குமார், மகேந்திரன், பாலாஜி ஆகியோர் மனுக்களை அளித்தனர்.
ஜமாபந்தியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில ஆலோசகர் என்.ராமன், மாநில துணைத்தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எல்.கிருஷ்ணன், ஜி.ரவி, வட்டார நிர்வாகிகள் சி.காளிராஜன், ஆர்.வெங்கடேசன், டி.விஸ்வநாத், வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமால், சீனிவாசன், புகழேந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை 154 மனுக்கள் பெறப்பட்டன.
கும்மிடிப்பூண்டி வட்டத்துக்கான ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் அருள் வளவன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பூதூர், தர்காஸ்கண்டிகை, வான்ராசிகுப்பம், நேமலூர், சிறுவாடா, மாதர்பாக்கம், மாநெல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
அதன்படி, பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக 76 மனுக்கள், இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 51 மனுக்கள், இதர மனுக்கள் 27 என 154 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து பயனாளிகளுக்கு வழங்கினார். இதர மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
ஊத்துக்கோட்டையில்: ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மனிலா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில், வட்டாட்சியர் கிருபா உஷா, தனி வட்டாட்சியர் லதா, மண்டல துணை வட்டாட்சியர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 238 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதற்கான ஆணைகளை ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மனிலா பயனாளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com