பழவேற்காடு-பசியாவரம்: பாலம் கட்டுவது எப்போது?  5 கிராம மக்கள் அவதி

பழவேற்காடு-பசியாவரம் இணைப்பு பாலம் அமைக்கும் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

பழவேற்காடு-பசியாவரம் இணைப்பு பாலம் அமைக்கும் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.
 இடையே பாலம் அமைக்கும் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் படகில் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியாக விளங்கும் பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன. அங்கு 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
 பழவேற்காடு கடலை ஒட்டி, பக்கிங்காம் கால்வாய் மற்றும் பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரி அமைந்துள்ளது. பழவேற்காடு தீவுப்பகுதியில் பசியாவரம், இடமணி குப்பம், இடமணி ஆதிதிராவிடர் காலனி, ரஹ்மத்நகர், சாத்தாங்குப்பம் ஆகிய 5 கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு 2ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அதில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்கள் வாங்க, மருத்துவ சிகிச்சை பெற மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் பழவேற்காடு வந்துதான் செல்லவேண்டும்.
 மேற்கண்ட 5 கிராமங்களை சுற்றிலும் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. கோடை காலங்களில் ஏரியில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது இவர்கள் எளிதாக அந்த ஏரியை கடந்து பழவேற்காடு வந்து சென்று விடுவர்.
 அதே நேரத்தில் மழை காலங்களில் மேற்கண்ட 5 கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்து விடும். அதுபோன்ற நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் படகின் மூலம்தான் ஏரியைக் கடந்து சென்று வருகின்றனர்.
 நீண்ட காலமாக
 கோரிக்கை.....
 இப்பகுதியில் பழவேற்காடு-பசியாவரம் இடையே பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கை பல்வேறு இடையூறுகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் படகில் ஏரியைக் கடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
 இது குறித்து சாத்தாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவரும், திருவள்ளூர் மாவட்ட மீனவர் சங்க பொதுச்செயலருமான துரை. மகேந்திரன் கூறுகையில், கடந்த 2007-ஆம் ஆண்டு சுனாமி நிதியின் கீழ் இங்கு பாலம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் டெண்டர் விடப்பட்டது. அப்போது பறவைகள் சரணாலயம், மத்திய சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறாததன் காரணமாக பாலம் அமைக்கும் பணிகள் தாற்காலிகமாக கைவிடப்பட்டது.
 தற்போது பறவைகள் சரணாலயத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து இன்னும் அனுமதி பெறாததால் பாலம் அமைக்கும் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என வேதனையுடன் தெரிவித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com