குழுக்களாக இணைந்து டெங்கு நோய் தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் டெங்கு நோய் தடுப்புப் பணியில் அரசுத் துறையினர், தன்னார்வலர்கள் டெங்கு நோய் தடுப்புப் பணியில்
குழுக்களாக இணைந்து டெங்கு நோய் தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் டெங்கு நோய் தடுப்புப் பணியில் அரசுத் துறையினர், தன்னார்வலர்கள் டெங்கு நோய் தடுப்புப் பணியில் குழுக்களாக இணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனை, ஆவடி காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு தின நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு நடைபெற்றது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
காய்ச்சலால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் காய்ச்சல், தொற்று நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அனைத்துப் பகுதிகளிலும் தூய்மை நடவடிக்கைகள் மேற்கொண்டால், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களை அழிக்க முடியும். இதன் அடிப்படையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், விடுதிகள், தொழிற்சாலை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை வளாகங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, சமூக நலத்துறை மற்றும் தேசிய மாணவர் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் தங்களின் சமூக கடமையாக எண்ணி பங்கேற்க வேண்டும்.
இதில், 5 முதல் 10 பேர் வரை ஒரு குழுவாக இணைந்து, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியின் மூலக் காரணிகளான தேங்காய் சிரட்டை, தண்ணீர் தொட்டி, டயர், பயன்படுத்திய டீ கப், பயன்படுத்தாத மீன்தொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரை அகற்றுதல், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் உள்ள தேவையற்ற பொருள்களை அகற்ற வேண்டும். இதனால் ஏடிஎஸ் கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும், ஒவ்வொரு துறையினரும் தங்கள் துறையில் பணியாற்றுவோரை ஊக்கப்படுத்தி டெங்கு தடுப்பு நடவடிக்கையில் பங்கேற்கச் செய்யவேண்டும். 
மேலும், ஆவடி அரசு மருத்துவமனைக்கு ரூ.32.87 கோடியில் நவீன மகப்பேறு மையம், உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு கட்டடங்கள் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்-ரே, வெண்டிலேட்டர் ஆகிய உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு குறித்த உறுதிமொழியை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டனர். 
இந்நிகழ்ச்சிகளில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், அம்பத்தூர் எம்எல்ஏ வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் ஏ. அப்துல் ரஹிம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் குழந்தைசாமி, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா. குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com