டெங்கு நோய் ஒழிப்புப் பணியில் உள்ளாட்சி ஊழியர்கள்

கும்மிடிப்பூண்டியில் சுகாதாரத் துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் இணைந்து புதன்கிழமை டெங்கு காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
டெங்கு நோய் ஒழிப்புப் பணியில் உள்ளாட்சி ஊழியர்கள்

கும்மிடிப்பூண்டியில் சுகாதாரத் துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் இணைந்து புதன்கிழமை டெங்கு காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் பிரபாகரன் ஆகியோரின் உத்தரவின்பேரில், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆரம்பாக்கத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டி வரை டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்றன.
அதன்படி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சம்பந்தன் உள்ளிட்டோர் ஆரம்பாக்கத்தில் சாலையோரக் கடைகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருள்களை டிராக்டரில் ஏற்றி அப்புறப்படுத்தினர். மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உள்ள பொருள்களை வைத்திருந்த கடைக்காரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, எளாவூர், பெத்திக்குப்பம், கும்மிடிப்பூண்டி பஜார் என சுமார் 16 கி.மீ. தொலைவுக்கு டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்றன. 
வழிநெடுகிலும் கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஒதுக்குப்புறமான பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.
ஊத்துக்கோட்டையில்: ஊத்துக்கோட்டை நகரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆய்வுசெய்து, கடைக்காரர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செங்குன்றத்தில்...
செங்குன்றத்தை அடுத்த நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் டெங்கு நோய் தடுப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நாரவாரிக்குப்பம், சோத்துப்பாக்கம், ஜி.என்.டி. சாலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள், ஓட்டல்கள், திரையரங்குகள், ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவர் ஜோஸ்பின் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன், ராஜ்குமார் (மருத்துவம்) ஆகியோர் பங்கேற்றனர்.
ஆய்வின்போது, 25-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பழைய டயர்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருத்தணியில்...
டெங்கு நோயை தடுக்கும் வகையில் திருத்தணியில் பழைய டயர்களை அகற்றும் பணியில் சுகாதாரத்துறையினர், நகராட்சி பணியாளர்கள் புதன்கிழமை தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
திருத்தணியில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி ஆணையர் முருகேசன், பொறியாளர் விஜயராஜ காமராஜர், பொதுப்பணி மேற்பார்வையாளர் நீல நாராயணன், துப்புரவு ஆய்வாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, புறவழிச்சாலை, காந்தி சாலை, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பழைய டயர் கடைகளுக்கு புதன்கிழமை நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது, மழைநீர் தேங்கிய பழைய டயர்களை அகற்றியும், கொசு உற்பத்தியாகும் டயர்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். 
மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் சுகாதாரச் சீர்கேடாக இருந்த பழைய டயர் கடைகளுக்கு அபாரதம் விதித்தனர். விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com