தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஓர் அரசுப் பள்ளி...!

ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் முயற்சி மற்றும் பங்களிப்பால் வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக நவீன வசதிகளுடன் செயல்பட்டு
தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஓர் அரசுப் பள்ளி...!

ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் முயற்சி மற்றும் பங்களிப்பால் வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. 
நவீன வகுப்பறைகள்: திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வண்ண ஓவியங்களுடன் கூடிய குளிரூட்டப்பட்ட நவீன ஸ்மார்ட் வகுப்பறை, 2-ஆம் வகுப்பில் செயல் வழிக்கற்றல் வட்ட மேஜை அமைப்பு, அனைத்து வகுப்புகளுக்கும் மின் சாதன காற்றோட்ட வசதி என தனியார் பள்ளிக்கு இணையாக நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஆங்கிலத்திலும் உரையாடுவதை பார்க்க முடிகிறது. வாரத்தில் ஒரு நாள் சிறப்பு சீருடையும் அணிந்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் இங்கு சேர்த்து வருகின்றனர். 
தனித்திறன் வளர்க்க பயிற்சி: இங்கு படித்து வரும் ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு எதில் ஆர்வம் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப தனித்திறன் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் ஏற்பாடு செய்கின்றனர். இதேபோல் சிலம்பம், சதுரங்கம், நடனம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிகளை இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தாங்களாக முன் வந்து அளிக்கின்றனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் சிலம்பம், சதுரங்கம், நடனப் போட்டிகளில் வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சிப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று வருகின்றனர். 
போட்டித் தேர்வுக்கு பயிற்சி: தேசிய ஊரகத் திறனாய்வுத் தேர்வு, அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் துளிர் போட்டித் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் பங்கேற்க ஆதார பயிற்சியாகவும் இது உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
சிறப்பு கையெழுத்துப் பயிற்சி: இவை தவிர, கூடுதல் பயிற்சியாக ஆங்கிலச் சொற்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதையும் கற்பித்து வருகின்றனர். அதேபோல், மாலை நேரங்களில் ஹிந்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கில எழுத்துகளை தனித்தன்மையுடன் அழகாக எழுதுவதற்கும் பயிற்சி அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் இசக்கியம்மாள் கூறியதாவது:
வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர்கள்.
இதனால் புது முயற்சியுடன் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். அதிலும் ஆங்கிலம் கற்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்கவும், அதை அப்படியே ஏடுகளில் எழுதவும் பயிற்சி அளிக்கிறோம். 
இதுபோன்று கற்பிப்பதால் மாணவர்கள் மனதில் எளிதில் பதிந்து விடும். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு பயிற்சிகளை அளிப்பதில் பேருதவியாக இருக்கின்றனர். இவர்களின் உதவியால் தான் முதல் வகுப்பை நவீன ஸ்மார்ட் வகுப்பறையாக செயல்படுவதற்கான கணினி மற்றும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 2-ஆம் வகுப்பில் செயல் வழிக்கற்றல் பயிற்சி அளிக்க வட்ட மேஜைகளும் வழங்கியுள்ளார்கள். தனியார் நிறுவனம் குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் வழங்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களை பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்க்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் 150 பேர் பயின்று வந்தனர். தற்போது 222 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் பள்ளியாக திகழும் வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் சுற்றுச் சுவர் தற்போது, சாலை ஓரத்தில் தாழ்வாக உள்ளது. இதனை உயர்த்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com