மாநில இளைஞர் விருதுக்கு 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களின் சமூக சேவையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் 'மாநில இளைஞர் விருது'க்கு தகுதியானோர் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு

இளைஞர்களின் சமூக சேவையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் 'மாநில இளைஞர் விருது'க்கு தகுதியானோர் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 'மாநில இளைஞர் விருது' வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 
இதன் அடிப்படையில் 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மாநில இளைஞர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். இந்தாண்டுக்கான விருது வரும் ஆகஸ்டு-15 ஆம் தேதி தமிழக முதல்வரால் வழங்கப்படும்.
இவ்விருதைப் பெறுவதற்குத் தகுதியாக கடந்த ஆண்டில் (2017-2018) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்து வருபவராக இருக்கவேண்டும். அதற்கான சான்றும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 
அதோடு, விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருப்பது அவசியம் ஆகும். இத்தகைய தொண்டுகள், கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவ்விருதுக்கு, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோர் விண்ணப்பிக்கக்கூடாது. இதில், விண்ணப்பிப்போர் உள்ளூர் பொது மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலரை வேலை நேரங்களில் 044-27666249 அல்லது 7401703482 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com