ஆந்திர எல்லையில் இரு லாரிகள் - பேருந்து மோதல்: ஒருவர் சாவு; 30 பேர் காயம்

கும்மிடிப்பூண்டி-ஆரம்பாக்கம் இடையே ஆந்திர எல்லையில் இரு லாரிகளும் ஒரு பேருந்தும் வியாழக்கிழமை  மோதி விபத்துக்குள்ளானதில்

கும்மிடிப்பூண்டி-ஆரம்பாக்கம் இடையே ஆந்திர எல்லையில் இரு லாரிகளும் ஒரு பேருந்தும் வியாழக்கிழமை  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திரத்தில் இருந்து சாம்பலை ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பர் லாரி கும்மிடிப்பூண்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதை கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மதன்(36) ஓட்டி வந்தார். அந்த லாரி ஆரம்பாக்கத்தை அடுத்த ராமாபுரம் குப்பம்  பகுதியில் வந்து கொண்டிருந்தபோது லாரியின் டயர் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்ப்புறத்தை நோக்கித்  திரும்பியது.
அதேநேரத்தில், சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரியும், கோயம்பேட்டில் இருந்து ஆந்திரப் பகுதியான ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டைக்கு 36 ஆண், பெண் பணியாளர்களை ஏற்றிய பேருந்தும் எதிர்
திசையில் வந்தன. 
அப்போது,  நிலைதடுமாறிய டிப்பர் லாரி, சரக்கு லாரி மீது மோதியது. இரு லாரிகளும் அந்தப் பேருந்தின் மீது மோதின. இதில், டிப்பர் லாரி ஓட்டுநர் மதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
 பேருந்தின் ஓட்டுநரான தம்புரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷுக்கு  (35)  இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. 
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், பேருந்தில் இருந்த 30  பணியாளர்களை மீட்டனர். படுகாயம் அடைந்திருந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பொது மருத்துவமனைக்கும், காளஹஸ்தியில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து தடா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இவ்விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம்-ஆந்திரம் மார்க்கத்தில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com