போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.7.49 கோடி மோசடி: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருவள்ளூர் அருகே, போலி நிதி நிறுவனம் நடத்தி 2,000 பேரிடம் ரூ.7.49 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

திருவள்ளூர் அருகே, போலி நிதி நிறுவனம் நடத்தி 2,000 பேரிடம் ரூ.7.49 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
திருவள்ளூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி முதலீடு செய்யும் தொகைக்கு இரு மடங்கு வட்டி தருவதாக சிலர் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்தனர். அந்த நபர்கள் குறிப்பிட்ட தவணை முடிந்தும் பணம் தராமல் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களில் சிலரை மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
அப்போது திருவாலங்காட்டைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: 
திருத்தணியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் சங்கரன்(40), அவரது மனைவி மணிலா(38), வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜி.செந்தில்குமார்(40) ஆகியோர் சேர்ந்து திருத்தணியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு இருமடங்கு வட்டி தருவதாகக் கூறினர். இதை உண்மையென நம்பி திருவாலங்காடு, நல்லாட்டூர், பழையனூர், சக்கரநல்லூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2013 முதல் மாதந்தோறும் தவணை முறையில் முதலீடு செய்து வந்தனர். இவ்வாறு 2,000 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.7.49 கோடியை அவர்கள் வசூலித்துள்ளனர். 
இதனிடையே, குறிப்பிட்ட ஆண்டுகள் முடிந்த நிலையிலும் தவணைத் தொகையைத் தராமல் நிதி நிறுவன நிர்வாகிகள் காலதாமதம் செய்து வந்தனர்.  அண்மையில் நிதி நிறுவன அலுவலகத்துக்கு மக்கள் சென்று பார்த்தபோது அலுவலகத்தை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் 3 பேரும் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது. 
இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com