கும்மிடிப்பூண்டி: 60 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில்   தேர்வாய் ஊராட்சியைத் தவிர 60 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில்   தேர்வாய் ஊராட்சியைத் தவிர 60 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறுகின்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று தங்கள் பகுதி பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்று கடந்த சில நாள்களாக கும்மிடிப்பூண்டியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து முகநூல், வாட்ஸ்அப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று பல்வேறு பிரச்னைகளை விவாதித்தனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பகல் 1 மணி வரை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் ஊராட்சி செயலாளர் பா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஆரணி ஆற்றுக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றித் தூர்வார வேண்டும், புதுவாயல் காலனியில் பொதுக் கழிப்பறை வளாகம் அமைக்க வேண்டும், புதுவாயல் அரசு நடுநிலைப்பள்ளியில் கலையரங்க வசதி ஏற்படுத்த வேண்டும், புதுவாயல்-2 வருவாய் கிராமத்தை புதுவாயல்-1 வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும், பெருமாள் கோயில் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெருவாயலில் ஊராட்சி செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெருவாயலில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான திருக்குளத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், அப்பகுதியில் உள்ள குளத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவரப்பேட்டையில் நடைபெற்ற கீழ்முதலம்பேடு ஊராட்சி கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சாமுவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தயாநிதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஊராட்சி முழுவதும் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அப்துல் கலாம் பேரன் பங்கேற்பு: புதுகும்மிடிப்பூண்டியில் ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணனின் பேரன் ஏ.பி.ஜெ.எம்.ஜெ.ஷேக் தாவூத் பங்கேற்று கிராம சபை நிகழ்வுகளைப் பார்வையிட்டார். 
இக்கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. இதில் அரசின் திட்டங்கள் விளக்கப்பட்டது. பின்னர் புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை நடுவது என்றும், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்றுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறுபுழல்பேட்டையில்: சிறுபுழல்பேட்டை மூர்த்தி,  பாத்தப்பாளையம் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேருந்து வசதி இல்லாத இப்பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும், பாத்தப்பாளையம் பகுதியை பூவலம்பேடு மின் வாரிய அலுவலகத்தோடு இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சியில்: பாப்பன்குப்பத்தில் ஊராட்சி செயலாளர் கர்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைக் கண்டித்தும், ஊராட்சியில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்வது என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.
ஆரம்பாக்கம் ஊராட்சியில் செயலாளர் முரளி தலைமையிலும், ரெட்டம்பேட்டில் ஊராட்சி  செயலாளர் குருமூர்த்தி தலைமையிலும், எகுமதுரையில் ஊராட்சி செயலாளர் சோபன்பாபு தலைமையிலும், தோக்கமூரில் ஊராட்சி செயலாளர் மூர்த்தி தலைமையிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
தேர்வாயில் கூட்டம் ரத்து: தேர்வாய் கிராமத்தில் கடந்த முறை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களான தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம்,  தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டைக்காக அமைக்கப்பட்ட உயர் மின் அழுத்த கோபுரங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இடமாற்றம் செய்வது, பள்ளியில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு அமைப்பது உள்ளிட்டவை இன்னும் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
பாடியநல்லூரில்...
பாடியநல்லூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
சோழவரம் ஒன்றியம், பாடியநல்லூர் முதல்நிலை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அங்காள ஈஸ்வரி கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பாடியநல்லூர் ஊராட்சி செயலர் சுரேஷ் தலைமை வகித்தார்.  இதில் பற்றாளர் ஸ்ரீபிரியா,  சைதாப்பேட்டை கூட்டுறவு மேலாண்மை இயக்குநரும், சோழவரம் கள அலுவலருமான வெங்கடரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில், சாலை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல், குப்பைகளை சேமித்து தரம் பிரித்து உரம் தயாரிக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
முன்னதாக, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள், கடந்த கிராம சபைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது வழங்கிய கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என ஊராட்சி செயலர் சுரேஷ் உறுதி அளித்தார்.
டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை..
திருவள்ளூர் அருகே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் கோரிக்கை விடுத்தனர்.  
திருவள்ளூரை அடுத்த தொட்டிக்கலை ஊராட்சி வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சந்தானம் தலைமை வகித்தார். இதில் ஆட்சியர் எ.சுந்தரவல்லி கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
 அப்போது, கிராம மக்கள் மத்தியில் ஊராட்சியில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள், குடிநீர் சிக்கனம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் செய்யப்பட்டுள்ள பணிகள், ஊராட்சியின் செலவு விவரம், நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.    அதைத் தொடர்ந்து, இங்குள்ள அரசு மதுபானக் கடையால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 
அதோடு விவசாய நிலங்கள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும், மது அருந்துவோர் வயல் வெளி, தோட்டம் போன்ற இடங்களில் அமர்ந்து கொள்வதால் பெண்கள் விவசாய வேலைக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 
எனவே, இங்குள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும். அதேபோல், மயானத்திற்குச் செல்லும் பாதையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்டு பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.    
பின்னர், ஆட்சியர் எ.சுந்தரவல்லி பேசியது:  திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில்  உள்ள 526 ஊராட்சிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்கெனவே அரசு  உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து கிராமங்களிலும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கூட்டம் பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே நடத்தப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக் கடையை அகற்ற ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் மயானப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.
மேலும், ஒவ்வொரு கிராமத்தையும் முழு சுகாதார கிராமமாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக வீடுகள் தோறும் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதுவரையில் கழிப்பறை அமைக்காதவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். 
அதேபோல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவே கூடாது. அதற்கு மாற்றாக துணிப்பைகள், பாக்குமட்டை தட்டு, வாழை இலை உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும். மேலும், கிராமத்திற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தும்  முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
 நிகழ்வில், உதவி இயக்குநர் (ஊராட்சி) ஸ்ரீதர், துணை ஆட்சியர் (பயிற்சி) ப்ரீத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) ஆர்.லதா, வட்டாட்சியர் மு.ரா.தமிழ்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com