பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்...

திருவள்ளூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் சுதந்திர தினவிழாவையொட்டி, புதன்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செய்தனர். 

திருவள்ளூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் சுதந்திர தினவிழாவையொட்டி, புதன்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செய்தனர். 
திருவள்ளூர் அருகே புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் இரா.தாஸ் தலைமை வகித்தார். ஆசிரியை மாலா வரவேற்புரை வழங்கினார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. அதையடுத்து சுதந்திரப் போராட்டங்களை நினைவூட்டும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பள்ளி வளாகத்தில் 72-ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் 72 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
வெண்மனம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி: சுதந்திர தினவிழாவில் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். திருவள்ளூர் நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி: சுதந்திர தினவிழாவையொட்டி, பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண் தேசியக் கொடியேற்றி வைத்தார். 
ஏபிஎஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி: திருவள்ளூர்-தலக்காஞ்சேரி ஏபிஎஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு செயலாளர் ரமேஷ் சுப்பிரமணியம், பொருளாளர் பிரேமா சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை வகித்தனர். 

திருத்தணியில்....
திருத்தணியில் சுதந்திர தின விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  
 திருத்தணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயசந்திரன், சேஷாசலம், குரைஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சக்கரபாணி வரவேற்றார்.
இதில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகளின் சிலம்பாட்டம், தேச பக்தி பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. 
பொதட்டூர்பேட்டையில் நடைபெற்ற விழாவில், பள்ளிப்பட்டு முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் இ.எஸ்.எஸ். ராமன் கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி, ஆக.15: கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொது அமைப்புகள், சங்கங்களின் சார்பில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். கல்விக் குழுமம் சார்பாக டி.ஜே.எஸ். சிபிஎஸ்சி பள்ளி, டி.ஜே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.ஜே.எஸ். தொழில்நுட்பக்  கல்லூரி, டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு டி.ஜே.எஸ். கல்வித் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இயக்குநர் ஜி.தமிழரசன், நிர்வாக அலுவலர்கள் ஏழுமலை, பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
டி.ஜே.எஸ். சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் சுகாதா தாஷ் வரவேற்றார், நிகழ்வில் மாணவர்களின் கொடி அணிவகுப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 
தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு தேச தலைவர்களின் வேடமணிந்து சுதந்திர தின உரையாற்றினர். பின்னர் கோலாட்டம், சிலம்பாட்டம், யோகா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் செயின்ட் மேரீஸ் தொடக்கப் பள்ளியில், தாளாளர் மெர்சி தலைமையில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியை விமலா தாமஸ், விழா ஒருங்கிணைப்பாளர் மைதிலி ஹரிகிருஷ்ணன், வினாஸ்ரீ யோகா மைய நிறுவனர் காளத்தீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவை ஒட்டி  பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவர் பி.கிரிதர்  பங்கேற்று தேசியக் கொடி ஏற்றி, சிறப்புரை வழங்கி மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.

அரசு அலுவலகங்களில்....
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் புதன்கிழமை சுதந்திர தினவிழா கொண்டாப்பட்டது.  
     திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட நீதிபதி செல்வநாதன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி பரமராஜ், மாவட்ட நீதிபதி மற்றும் மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் பிச்சையம்மாள் மற்றும் வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
      இதேபோல், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் காவேரி தலைமையிலும், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தமிழ்செல்வன் தலைமையிலும், திருவள்ளூர் நகராட்சியில் ஆணையாளர் முருகேசன் தலைமையிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சந்தானம் ஆகியோர் தலைமையிலும் தேசியக் கொடியேற்றப்பட்டது.  
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின  விழாவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் நரேந்திரன் தேசியக் கொடியேற்றினார். 
இதேபோல், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, தயாநிதி ஆகியோர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டாட்சியர் மதன்குப்புராஜ் தேசியக் கொடியேற்றினார். 
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தேசியக் கொடியேற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com