துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: ஜெகதீஷ் கிர்மனி அறிவுறுத்தல்

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் பணியில் ஈடுபடுத்தினால், ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் பணியில் ஈடுபடுத்தினால், ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய துப்புரவுத் தொழிலாளர்கள் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மனி தெரிவித்துள்ளார்.
தேசிய துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வு ஆணையத்தின் ஆய்வுக் குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். இதில், ஆணையத்தின் உறுப்பினர்  ஜெகதீஷ் கிர்மனி  பங்கேற்று துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில், ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளிக்கும் சொந்தவீடு, பாதுகாப்பு உபகரணங்கள்,  சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா,  குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா, குழந்தைகளின் கல்வித் தரம்,   தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதா என்பது குறித்து,  நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்தார். 
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மனிதக் கழிவுகளை மனிதரை வைத்து அகற்றுவதற்கு எதிரான சட்டம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நல்வாழ்வு சட்டம் 2013-இல் கொண்டு வரப்பட்டது. 
இதைக் கண்காணிக்க தேசிய அளவில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  துப்புரவுத் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக குடியிருப்பு அமைத்தல், அவர்களின் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்தல் போன்றவை இந்த ஆணையத்தின் நோக்கம் ஆகும். 
மேலும், தொழிலாளர்களுக்கு துப்புரவுப் பணிகளின் போது பாதுகாப்பு மேற்கொள்வதற்கான கையுறை, காலுறை, முகத்தை மூடும் சுவாச மூடி, கைகளைச் சுத்தம் செய்வதற்கான சோப்பு ஆகியவை அவசியம் வழங்கப்பட வேண்டும். அதேபோல், அவர்களின் சுகாதாரத்துக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். 
துப்புரவுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மறுவாழ்விற்காக ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 25 லட்சம் வரையில் தொழில் கடனுதவி வழங்கவும் தேசிய ஆணையம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த ஆய்வில், தமிழகத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக சமூக சேவை  அமைப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுபோல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மீண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் மூலம் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த மாவட்டத்தில், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் 1,500 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்புரவுப் பணியின்போது, பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் பணியில் ஈடுபடுத்தினால் ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்ற ஒப்பந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
இக்கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், நகராட்சி மற்றும்  பேரூராட்சி சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com