பூண்டி மீன்குஞ்சுகள் உற்பத்தி நிலையம் மூலம் 1200 டன் உற்பத்தி செய்ய இலக்கு: ஆட்சியர் எ.சுந்தரவல்லி

பூண்டி பகுதியைச் சுற்றியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில், மீன்குஞ்சுகள் உற்பத்தி நிலையம் மூலம் ஆண்டுக்கு

பூண்டி பகுதியைச் சுற்றியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில், மீன்குஞ்சுகள் உற்பத்தி நிலையம் மூலம் ஆண்டுக்கு 1200 டன் உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
திருவள்ளூர் அருகே பூண்டியில் ரூ.3 கோடியில் புதுப்பித்து விரிவாக்கம் செய்யப்பட்ட மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து புதுப்பித்து விரிவாக்கம் செய்யப்பட்ட மீன்குஞ்சுகள் நர்சரிக் குளங்களை ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் திருவள்ளுர் எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 
இதுத் தொடர்ந்து, ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
திருவள்ளுர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் பூண்டியில் மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் 4.6 ஹெக்டேர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தமிழகத்தின் மீன் குஞ்சு உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் நபார்டு நிதி உதவித் திட்டம் மூலம் இப்பண்ணை ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சினை மீன்குளம், நீர் சுத்திகரிப்பு தொட்டி, உள்மடை மற்றும் வெளிமடை பழுது பார்த்தல், பண்ணை சுற்றுச்சுவர், சாலைகள், தொட்டிகள் மற்றும் கழிவறை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கூடுதல் வசதிகள் மூலம் ஆண்டிற்கு 60 லட்சம் சாதா கெண்டை நுண்மீன் குஞ்சுகளும், 6.5 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன் விரலிகளும் மற்றும் 24 ஆயிரம் நன்கு வளர்ந்த 100 கிராம் அளவு மீன்களும் வளர்க்கப்பட்டு மீன்வளர்ப்போர்க்கு மீன் குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் 1200 டன்கள் மீன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இந்த மீன் நர்சரி பண்ணையில் 40 நாள்கள் வரையில் வளர்க்கப்பட்ட 11 ஆயிரம் ரோகு வகை மீன்குஞ்சுகளையும் முதல் கட்டமாக ஆட்சியரும், மக்களவை உறுப்பினரும் ஏரிக்குள் விட்டனர். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் ந.சந்திரா, உதவி இயக்குநர் (மீன்வளத் துறை) ஜி.வேலன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com