ஆலைக் கழிவு எரிப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தொழிற்சாலை முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலைக் கழிவுகள் வெட்ட வெளியில் எரிக்கப்பட்டதால் எழும்பிய

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலைக் கழிவுகள் வெட்ட வெளியில் எரிக்கப்பட்டதால் எழும்பிய கரும்புகையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதியடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சிப்காட்-பாத்தபாளையம் சாலையில் டால்மியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் திடக் கழிவுகள் தினந்தோறும் தொழிற்சாலையை ஒட்டியுள்ள காலிப் பகுதியில் இரவு நேரத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இந்த தீயில் இருந்து வெளிவரும் புகையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தொழிற்சாலையின் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என அரசு விதிமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ள நிலையில் இந்த தொழிற்சாலையின் கழிவுகள் பட்டப்பகலில் வெளியே கொட்டப்பட்டு எரிக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. 
இந்த கழிவுகள் எரிக்கப்பட்டு வெளியேறும் நச்சுப் புகையால் இப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில், எப்போதும் இரவு நேரத்தில் எரிக்கப்படும் கழிவை திங்கள்கிழமை தொழிற்சாலை நிர்வாகத்தினர் பகலிலேயே எரித்ததன் காரணமாக எழும்பிய கரும்புகையால் அப்பகுதியில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு, கழிவுகளை இப்பகுதியில் எரிக்கக்கூடாது எனக் கூறி போராட்டம் நடத்தினர். 
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெய் கூறியது: எப்போதும் இரவில் கழிவுகளை எரிக்கும் நிர்வாகம், பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாடும் பகுதியிலும், அருகே குடியிருப்புகள் உள்ளன என்ற அக்கறையில்லாமலும் கழிவுகளை எரித்தது கண்டனத்துக்குரியது. இதனால், பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே கொட்டப்படும் ஆலைக்கழிவுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் தின்பதால் அவை உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. இது குறித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளோம். ஏற்கெனவே கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு தொழிற்சாலைகளால் காற்று, நிலம், நீர் மாசடைந்துள்ளது. தற்போது பட்டப்பகலிலேயே தொழிற்சாலையின் கழிவுகள் எரிக்கப்படுகிறது. 
இந்நிலை தொடர்ந்தால், பாத்தபாளையம், எஸ்.ஆர்.கண்டிகை, பாப்பன் குப்பம், போடிரெட்டி கண்டிகை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதற்கு முன், மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

டால்மியா தொழிற்சாலை கழிவுகள் எரிக்கப்பட்டதால் எழும்பிய கரும்புகை மண்டலம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com