புழல் ஏரிக்கால்வாய்களை ஆக்கிரமித்த குப்பைகள்

மாதவரம் பகுதியில் அதிகரித்து வரும் குப்பைக் குவியல்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
புழல் ஏரியின் கால்வாய் அருகே கொட்டி குப்பைகள் எரிக்கப்படுவதால் எழுந்துள்ள புகை மண்டலம்.
புழல் ஏரியின் கால்வாய் அருகே கொட்டி குப்பைகள் எரிக்கப்படுவதால் எழுந்துள்ள புகை மண்டலம்.

மாதவரம் பகுதியில் அதிகரித்து வரும் குப்பைக் குவியல்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
செங்குன்றம், பாடியநல்லூர், புழல், வடபெரும்பாக்கம், மாதவரம் பால்பண்ணை ஆகிய பகுதிகள் மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டவை. இந்நிலையில், வெவ்வேறு இடங்களில் இருந்து குப்பைகளை அள்ளி, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி வாகனங்கள் மூலம் கொண்டுவந்து புழல் ஏரி அருகே கொட்டி வருகின்றனர். இதனால் புழல் ஏரி அருகே துர்நாற்றம் வீசுவதோடு, சுமார் 1 கி.மீ. தூரம் வரை ஏரியின் கால்வாய் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் தீ அணையாமல் சுமார் 2 மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்பவர்களும் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், துர்நாற்றம் போன்ற இன்னல்கûளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 
இதேபோல், பாடியநல்லூர், செங்குன்றம், பவானிநகர், பெரியார்நகர், ஜோதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதற்கு பதிலாக, அதேஇடத்தில் தேக்கி வைத்து தீயிட்டு எரித்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் சாய்வாக உள்ள மின்கம்பங்களை மாற்றாமல் உள்ளனர். இதனால் மின்கம்பங்கள் மீது கனரக வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. 
இதுகுறித்து முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்வவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் தற்போது பழுதடைந்துள்ளன. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 
இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த சாலை வழியாகவே செல்லவேண்டும். இதனால், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் போது ஏதேனும் விபத்து நடக்குமோ என அஞ்சுகின்றனர். 
சாலையில் நடந்து சென்றால், தூசுகள் பறந்து மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும், இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் அலட்சியமாக உள்ள அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ந்து இந்நிலை நீடித்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து, உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், புழல் ஏரி பகுதியில் குப்பைகள் குவிப்பது, எரிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட பலத்தரப்பு அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், துப்புரவுக்கு போதிய பணியாளர்கள் இல்லை, பணியாளர்களை அமர்த்தினால் ஊதியம் வழங்க நிதியும் இல்லை என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com