ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், பெரிய நொளம்பூர் பகுதியில் ஆக்கிரமிப்பு என கூறி நிலமோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம், பெரிய நொளம்பூர் பகுதியில் ஆக்கிரமிப்பு என கூறி நிலமோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மதுரவாயல் அருகே பெரியநொளம்பூர் கிராமத்தில் குடியிருந்து வருவோரை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, சிலர் அப்புறப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒரு சிலரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க போலீஸார் அனுமதி அளித்தனர். 
இதுகுறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: பெரிய நொளம்பூர், பாட சாலைத் தெருவைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்கு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி மதுரவாயல் வட்டாட்சியர் இப்பகுதிக்கு வந்தார். அவர், நொளம்பூர் ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு காரணமாக இந்த நடவடிக்கையை வட்டாட்சியர் மேற்கொண்டது தெரியவந்தது. 
மேற்குறிப்பிட்ட குருசாமி, நொளம்பூர் கோயில் காலனியில் குடியிருப்போர் நலச்சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர், இப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன் நிலமோசடியில் ஈடுபட்டு வருகிறார். 
இந்த இடம் ஏற்கெனவே ஏரிப்பகுதியாக (ஏரி ஸ்கீம்) மதிப்பீடு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.வால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள 500 குடும்பங்களையும் வெளியேற்றி விட்டு, அந்த நிலத்தை மறுபங்கீடு முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்திலேயே குருசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு அரசு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்து வருகின்றனர். அதனால் கிராம மக்களின் அமைதியைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக எங்கள் குடியிருப்புப் பகுதிகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட பகுதியில் நேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com