இடிந்து விழும் நிலையில் வீடுகள்: வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கும்மிடிப்பூண்டி அருகே, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சுண்ணாம்புகுளம் ஊராட்சியைச் சேர்ந்த பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கடந்த 1989-ஆம் ஆண்டு அரசு சார்பில் 180 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. தற்போது, இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்துள்ளதால், மக்கள் வசிக்க தகுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
மேலும், இந்த வீடுகளுக்கு இதுவரை வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வீடு புனரமைப்புக்கான வங்கிக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட எதையும் பெற முடியாமல் கடந்த 29 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோடு இணைந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெ.அருள் தலைமை வகித்தார். பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், ஏ.குமார், ஏ.குலசேகரன், ஏ.மணிமாறன், ஏ.அஞ்சலை, கே.பாக்யராஜ், டி.ஆர்.தேசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணப்பன், மாநிலக்குழு உறுப்பினர் பி.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர்கள் திருவள்ளூர் சரவணன், மீஞ்சூர் பாலன், மாதவரம் ஜெய்கோஷ், புழல் சீனிவாசன், சோழவரம் ராஜசேகர், மாவட்டக் குழு உறுப்பினர் கஜேந்திரன், ஏஐடியூசி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். 
இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் கலைபாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது, விரைவில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பெரியகுப்பம் பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com