மீட்கப்பட்ட 111 கொத்தடிமைகளுக்கு ரூ.22.20 லட்சம் நிவாரண உதவி

திருவள்ளூர் அருகே மீட்கப்பட்ட கொத்தடிமைகள் 111 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22.20 லட்சம் நிவாரண உதவியை ஆட்சியர் எ.சுந்தரவல்லி சனிக்கிழமை வழங்கினார்.

திருவள்ளூர் அருகே மீட்கப்பட்ட கொத்தடிமைகள் 111 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22.20 லட்சம் நிவாரண உதவியை ஆட்சியர் எ.சுந்தரவல்லி சனிக்கிழமை வழங்கினார்.
ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 62 ஆண்கள், 49 பெண்கள் மற்றும் 36 குழந்தைகள் என மொத்தம் 147 பேர் கொத்தடிமைகளாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட அவர்கள் திருவள்ளூரில் உள்ள தனியார் அரங்கத்தில் தங்கவைக்கப்பட்டனர். கடந்த 2 நாள்களாக அவர்களுக்கு உணவு , குடிநீர், மருத்துவ உதவி ஆகியவை மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிலையில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக நேரில் வந்த ஆட்சியர், கொத்தடிமைகள் (குழந்தைகள் தவிர) 111 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22.20 லட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து 147 பேரும் சத்தீஷ்கரில் உள்ள ராய்ப்பூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொத்தடிமைகளுடன் பாதுகாப்புக்கு 4 போலீஸார், 2 வருவாய்த் துறை அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் ஒருவர் என 7 பேர் உடன் சென்றுள்ளனர். இவர்கள் ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கொத்தடிமைகளை ஒப்படைத்த பின் திரும்புவார்கள் என ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com