ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் கொள்ளை

திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து, தம்பதியைக் கட்டிப் போட்டுவிட்டு, 150 சவரன் நகைகள், செல்லிடப்பேசிகள் மற்றும் விலையுயர்ந்த மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள்

திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து, தம்பதியைக் கட்டிப் போட்டுவிட்டு, 150 சவரன் நகைகள், செல்லிடப்பேசிகள் மற்றும் விலையுயர்ந்த மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ராஜாஜிபுரம் பத்மாவதி நகரில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (63). ஆடிட்டரான இவருக்கு, மனைவி ரஜிதா(60), மகன்கள் ரஸித் (39), லோகேஷ்(35) ஆகியோர் உள்ளனர். மகன்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.
இதில், லோகேஷ் கடந்த வாரம் திருவள்ளூருக்கு வந்துள்ளார். இந்நிலையில், ராமச்சந்திரனும், ரஜிதாவும் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கதவை தாழிட்டுவிட்டு, தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்த மர்ம நபர்கள் கதவைத் தட்டியுள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட தம்பதி கதவைத் திறக்காமல் இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து பின்புறக் கதவை உடைத்துக் கொண்டு, முகமூடி அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்தது. அதைப் பார்த்த தம்பதி, கூச்சலிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். உடனே சப்தம் போடக்கூடாது எனக்கூறி, கத்தி மற்றும் உருட்டுக்கட்டையைக் கொண்டு மிரட்டி, தம்பதியை கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர், அவர்களிடம் பீரோ சாவியை வாங்கி, அதில் வைத்திருந்த 150 சவரன் நகை, ராமச்சந்திரன் அணிந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க பிரேம் கொண்ட மூக்குக் கண்ணாடி மற்றும் 2 செல்லிடப்பேசிகளையும் அவர்கள் கொள்ளையடித்தனர். அதைத் தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் தப்பிச் செல்வதற்காக வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் சாவியையும் வாங்கிக் கொண்டு, அதிலேயே தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, ராமச்சந்திரனின் அலறல் சப்தம் கேட்டு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் லோகேஷ் கீழே இறங்கி வந்துள்ளார். பின்னர், இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
தகவலறிந்த திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கொள்ளை நடந்த வீட்டைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி வழியாக அதிகாலை 3 மணி அளவில் வாகனத்தில் கொள்ளையர்கள் சென்றது வெப்கேமரா மூலம் தெரியவந்தது. கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com