அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கக் கோரிக்கை

பொன்னேரி அரசு மருத்துவமனையில் சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு

பொன்னேரி அரசு மருத்துவமனையில் சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தாலுக்காவில் மீஞ்சூர், சோழவரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அத்துடன் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய மூன்று பேரூராட்சிகள் அமைந்துள்ளன. பொன்னேரியில் நகரம், கிராமங்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  
பொன்னேரி ரயில் நிலைய சாலையில், பொன்னேரி தாலுக்கா தலைமை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இது 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது. பழமையான இம்மருத்துவமனையில் நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 
அத்துடன் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் மகப்பேறு பிரிவில் மாதம் தோறும் 100முதல் 150 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன.   
இங்கு சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை பெற ரத்த சுத்திகரிப்புப் பிரிவு, சித்த மருத்துவ பிரிவும் அமைந்துள்ளது.   இம்மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் தழும்பில்லாமல் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை ஆகியவை செய்யப்படுகின்றன.  மேலும் இம்மருத்துவமனையில், ரூ. 4 கோடி செலவில் அவசர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான கட்டடம் கட்ட அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 
இந்நிலையில், இம்மருத்துவமனையில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது. 
இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் மகன் சந்தோஷிற்கு(10) நவம்பர் 11-ஆம் தேதியில் இருந்து காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவரது தாய் லட்சுமி, சந்தோஷை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 
தொடர்ந்து இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையிலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அங்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  சாதாராண காய்ச்சல்தான என வழக்கமான மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பினர். ஆனால், சந்தோஷை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, டைபாய்டு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. 
அண்மையில் இதே போன்று மெதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் குழந்தைக்கு இருமலுக்கு அளிக்கப்பட்டும் மருந்து 
இல்லை என இம்மருத்துவமனையில் கூறியுள்ளனர். 
எனவே இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் ஏழை, எளியோர்  நலன் கருதி அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் அளிக்க,  தலைமை மருத்துவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.+
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com