குறுகலான தெருக்களில் குப்பை சேகரிக்க புதிய பேட்டரி வாகனம் அறிமுகம்

திருவள்ளூர் நகராட்சியில் குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில் எளிதாகச் சென்று குப்பைகளை

திருவள்ளூர் நகராட்சியில் குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில் எளிதாகச் சென்று குப்பைகளை சேகரிக்க மின்சாரத்தில் இயங்கும் வகையில் தலா ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 18 பேட்டரி வாகனங்களை ஒதுக்கியுள்ளதாகவும், இதில் முதல் கட்டமாக 4 வாகனங்களை குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் மொத்தம் 27 வார்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். மேலும், இதைத் தவிர இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் சுற்றுப்புறப் பகுதிகளில் தங்கியும் பணியாற்றி வருகின்றனர். இதனால், நகராட்சி பகுதியில் பஜார் பகுதி, குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் மக்கும் குப்பைகள் 10 டன்னும், மக்காத குப்பைகள் 10 டன்னும் துப்புரவு தொழிலாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
 இது வரை சந்துகள் மற்றும் குறுகலான பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க துப்புரவு தொழிலாளர்கள் 3 சக்கர வாகனங்களையே அதிக பயன்படுத்துவதோடு, நெடுஞ்சாலைக்கு வந்து குப்பைகள் லாரிகளில் சேகரித்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள நுங்கம்பாக்கம் உரக்குடில் மையம், ஈக்காடு உரக்குடில் மையம் மற்றும் அந்தந்த வார்டுகளில் உள்ள பூங்கா உரக்குடில்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. 
   அதிலும் திடக்கழிவு திட்ட மேலாண்மை திட்டம் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை மூன்று சக்கர வாகனங்களில் கொண்டு செல்வதற்கு பெண் துப்புரவு தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர். அதேபோல், தெருக்களில் குப்பைகள் சேகரிப்பதிலும் இடையூறு ஏற்பட்டது. இதைத் கருத்தில் கொண்டு தூய்மை பாரத இயக்கத் திட்டம் மூலம் நகராட்சிகளுக்கு சந்துகள், குறுகலான பாதையில் எளிதாக சென்று குப்பைகளை சேகரிக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி பொருத்தப்பட்ட வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் முதல்கட்டமாக 4 வாகனங்கள் ஒதுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இது குறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், துப்புரவுப் பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பைகளை கைகளால் அள்ளாமல் கூடைகளில் பிரித்து வாங்கி சேகரித்து வருகின்றனர். இதில் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொரு வார்டிலும் மூன்று சக்கர வாகனத்தில் சென்று சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் மூலம் நகராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனம் ஒதுக்கப்பட இருக்கிறது. இதேபோல் மாநில அளவில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் வார்டுகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த பேட்டரி வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் நகராட்சிக்கு தலா ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 18 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 4 வாகனங்கள் குப்பை அள்ளும் பணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 
இந்த வாகனங்கள் மூலம் குறுகலான சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் எளிதாகச் சென்று குப்பைகளை சேகரிக்கவும், அவற்றை விரைவாக திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படும் பகுதிக்குக் கொண்டு செல்லவும் முடியும். அதிலும் 3 மணிநேரம் பேட்டரியில் சார்ஜ் செய்தால், 8 மணிநேரம் வரையில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் யார் வேண்டுமானாலும் இயக்கும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com