அக். 24-க்குப் பின் குடியிருப்புகள், வணிக வளாகங்களை சுகாதாரக் கேடாக வைத்திருந்தால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் குடியிருப்புகள் மற்றும் வளாகங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாமல், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரக் கேடாக வைத்திருந்தால் அபராதம் விதித்து

திருவள்ளூர் மாவட்டத்தில் குடியிருப்புகள் மற்றும் வளாகங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாமல், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரக் கேடாக வைத்திருந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரித்துள்ளார்.
 இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிக்காக பணியாளர்கள் செல்லும்போது வீடுகள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள், காலி மனைகள், மருத்துவமனைகளில் மழைத்தண்ணீர் தேங்குமாறு வெளிப்புறங்களில் போடப்பட்டுள்ள உடைந்த பானைகள், பழைய மின்சாதனப் பொருள்கள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், தார்பாலின் ஷீட், தண்ணீர் தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பழைய டயர்களில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
 எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் தங்களது இல்லங்களையும், அலுவலக வளாகங்களையும் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள திங்கள்கிழமை (அக்டோபர் 15) முதல் அக்.24 -ஆம் தேதி வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 அதைத் தொடர்ந்து, அக்டோபர் 25-ஆம் தேதி ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும், வார்டு வாரியாக குடியிருப்புகள் தோறும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வர்.
 அப்போது, குடியிருப்புகளிலோ, அலுவலக வளாகங்களிலோ டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் அப்பகுதி இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டிற்கும், வணிக வளாகத்திற்கும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com