பிறப்பு விகிதம் குறைந்த மாவட்டங்களில் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்: தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
பிறப்பு விகிதம் குறைந்த மாவட்டங்களில் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்: தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு


பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கருவிலேயே பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவை அழிப்பதைத் தடுக்கும் வகையில் பெண்களுக்கு சொத்து உரிமையில் சமபங்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர் கல்விக்கு உதவித் தொகை, திருமண நிதி உதவி, கர்ப்பகால உதவித் தொகை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பேறுகால சிகிச்சை உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் ஏற்கெனவே அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
இது தவிர, பாலின பாகுபாடு காரணமாக பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதை தவிர்க்க அரசால் தொட்டில் குழந்தைகள் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த 10 மாவட்டங்கள்: இந்திய அளவில் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்களும், மாநில அளவில் ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்களும் உள்ளனர். இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தமிழகத்தில் கடந்த 2011- இல் பதிவான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அரியலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருச்சி, சென்னை ஆகிய 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 
அதிலும், தேசிய அளவில் சராசரியைவிட குறைந்த அளவில் பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற தகவல் கவலையளிப்பதாக உள்ளது. 
எனவே, இந்த 10 மாவட்டங்களில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிவிக்கும் ஸ்கேன் மையங்களை ஆய்வு செய்தல், பெண் குழந்தைகள் பிறந்த தேதியை உறுதி செய்தல், பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்து அவர்களது வளர்ச்சியைக் கண்காணித்தல், அவர்களது கல்வி வாய்ப்பை உறுதி செய்தல் போன்றவை செயல்படுத்தப்பட இருக்கிறது.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டம் மூலம் தொடர் கண்காணிப்பு: இத்திட்டத்தின்படி, பெண்கள் கருவுற்ற நாளிலிருந்து பெயர்களைப் பதிவு செய்து, தொடர்ந்து ஊராட்சி, கிராம செவிலியர் மையம், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவைகளால் தீவிரமாகக் கண்காணிக்கப்படவுள்ளனர். 
இதைத் தொடர்ந்து, மாவட்ட சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் அனைத்துத் துறைகளிலும் பயிற்சி, கருத்தரங்குகள் மூலம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்பணிகளை மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து செயல்படுத்துவதற்காக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஊராட்சிகள் தோறும் தகவல் பலகை 
மேலும், இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த விழிப்புணர்வுப் பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்பட இருக்கின்றன. அதேபோல், இம்மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், நகராட்சிகள் தோறும் ஆண், பெண் குழந்தைகள் குறித்த தகவல் பலகையும் அமைக்கப்படும்.
இதில் ஒவ்வொரு மாதந்தோறும் கர்ப்பிணிகளின் விவரம், பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவை பதிவு செய்யப்படும். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தொடர்பு கொள்ள 1098 என்ற இலவச தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் தகவல் பலகையில் இடம்பெறச் செய்யவேண்டும் எனவும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வலியுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிர விழிப்புணர்வு 
இந்நிலையில், இத்துறையின் சார்பில் புதுதில்லியில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு இத்திட்டம் குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கிராமங்களில் இருந்து நகரம் வரையில் அனைத்துத் துறையுடன் ஒருங்கிணைந்து பெண் சிசுக்கள் கண்காணிக்கப்படும். இது தொடர்பாக, தம்பதியருக்கு விழிப்புணர்வு மூலம் பெண் குழந்தைகள் மீது விருப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


கடந்த 2011- இல் பதிவான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அரியலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருச்சி, சென்னை ஆகிய 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும், தேசிய அளவில் சராசரியைவிட குறைந்த அளவில் பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற தகவல் கவலையளிப்பதாக உள்ளது. எனவே, இந்த 10 மாவட்டங்களில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com