அருணாசலேஸ்வரர் கோயிலில் தீ மிதித் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ மிதித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ மிதித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானபக்தர்கள் தீ மிதித்தனர்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெற்றது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், கோயில் குளத்தில் தீர்த்தவாரி, வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நள்ளிரவில் தீமிதி திருவிழா: இதையடுத்து, நள்ளிரவு 12.45 மணிக்கு உண்ணாமுலையம்மன் சன்னிதி எதிரே தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதற்காக விரதம் கடைப்பிடித்து வந்த ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.

அதிகாலை 1.30 மணி வரை நடைபெற்ற தீமிதி விழாவைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் காத்திருந்தனர். கோயில் இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியா, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், கோயில் மணியம் செந்தில், கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இத்துடன் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com