சாரல் மழை: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

போளூர் ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் சாரல் மழையால் குறுகிய கால நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சாரல் மழை: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

போளூர் ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் சாரல் மழையால் குறுகிய கால நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
போளூர் வட்டத்தில் உள்ள மாம்பட்டு, கேளூர், சந்தவாசல், பால்வார்த்துவென்றான், ஆர்.குண்ணத்தூர், வசூர், குருவிமலை, வாழியூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கரும்பு, வாழை, மஞ்சள், நெற்பயிர் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
இதில், கரும்பு, மஞ்சள், வாழை ஓர் ஆண்டுப் பயிர்களாகும். நெல் மட்டும் ஆண்டுக்கு 3 பருவமாக குறுகிய, நீண்ட கால பயிராக கிணற்று நீர் மற்றும் பருவ மழையை நம்பி விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.
இந்த ஆண்டு கடந்த ஆடி 18 மற்றும் ஆவணி மாதங்களில் பருவ மழை, கிணற்று நீரை நம்பி குறுகியகால பயிரான 015, கோ.51 உள்ளிட்ட பல்வேறு ரக நெற்பயிர்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். தற்போது இந்த நெல் பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கடந்த வாரம் முதல் போளூர் வட்டாரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி, ஈரமான நிலை உள்ளது.
தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், அறுவடை இயந்திரத்தை வயலில் இறக்கினால், சேற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும், தொடர்ந்து மழை பெய்வதால், நெல்மணிகள் உதிர்வதுடன், நிறம் மாறும் சூழலும் உருவாகியுள்ளது.
தற்போது விவசாய கூலி ஆள்கள் கிடைக்காததன் காரணமாக நெற்பயிரை அறுவடை செய்ய அறுவடை இயந்திரத்தையே விவசாயிகள் நம்பியுள்ளனர். எனவே, தற்போது பெய்து வரும் சாரல் மழையால் நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com