பொலிவு பெறுமா சாத்தனூர் அணைப் பகுதி?

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணைப்பகுதியில் மாதிரி அணை கட்டடம், மீன் அருங்காட்சியகம், சுற்றுலா...
பொலிவு பெறுமா சாத்தனூர் அணைப் பகுதி?

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணைப்பகுதியில் மாதிரி அணை கட்டடம், மீன் அருங்காட்சியகம், சுற்றுலா சிறப்பு ரயில் சேவை ஆகியவை பயன்பாடின்றி உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அணைப் பகுதியில் சிறப்புக் கவனம் செலுத்தி, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், தண்டராம்பட்டு - செங்கம் சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, எழிலுற அமைந்துள்ள சாத்தனூர் அணை, பாசனத்துக்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது.

பரந்து விரிந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் 119 அடி உயர இந்த அணையின் கரைப் பகுதியில் அழகிய புல்வெளிகள், சிறுவர் விளையாட்டுப் பூங்காக்கள், முதலைப் பண்ணை, படகு குளம், நீச்சல் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

மலைகளுக்கு அருகே இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த அணைப் பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக சமுதாயக்கூடம், வாகன நிறுத்துமிடம் போன்றவையும் உள்ளன.

எனினும், அணைப் பகுதியில் உள்ள வண்ண மீன் காப்பகம் எனப்படும் மீன் அருங்காட்சியகம், மாதிரி அணை கட்டடம் ஆகியவை பல மாதங்களாக பூட்டியே கிடக்கின்றன.

மேலும், இங்கு இருந்த சிறுவர் சுற்றுலா ரயில் சேவை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. இங்குள்ள முதலைப் பண்ணையில், சுமார் 25 தொட்டிகளில் 500 முதலைகள் வைத்து பாரமரிக்கப்படுகின்றன. ஆனால், இங்கிருக்கும் முதலைகள் எந்த வகையைச் சேர்ந்தவை, எந்த நாட்டை பூர்விகமாகக் கொண்டவை, இதன் அறிவியல் பெயர் என்ன என்பது குறித்த எந்த விவரமும் இங்கில்லை. இங்குள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் மாசடைந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு குறைபாடுகளால் சுற்றுலா வருவோர் ஏமாற்றமடைகின்றனர்.

மேலும், அணை பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால், சுற்றுலாப் பயணிகள் பரிதவிக்கும் நிலையும் உள்ளது.

எனவே, அணைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சிறுவர் சுற்றுலா ரயில் சேவை, மாதிரி அணைக் கட்டடம், மீன் அருங்காட்சியகம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com