மதுக் கடை அமைக்க எதிர்ப்பு: 2 கிராமங்களில் போராட்டம்

செய்யாறு அருகே உள்ள மங்கலம், வேட்டவலத்தை அடுத்த ஏர்ப்பாக்கம் ஆகிய கிராமங்களில் டாஸ்மாக் மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு அருகே உள்ள மங்கலம், வேட்டவலத்தை அடுத்த ஏர்ப்பாக்கம் ஆகிய கிராமங்களில் டாஸ்மாக் மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில், இரும்பந்தாங்கல் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுக் கடை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூடப்பட்டது. அந்தக் கடையை மங்கலம் கிராமத்தில் திறக்க வருவாய்த் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மதுப் பாட்டில்களும் அங்கு விற்பனைக்கு குவிக்கப்பட்டன. மேலும், சனிக்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து விற்பனையைத் தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில், மங்கலம் கிராம மக்கள் அரசு மதுக் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் குணசேகரன், காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி, வட்டாட்சியர் ஜெயராமச்சந்திரன் மற்றும் கலால் துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், அதிகாரிகளின் சாமதானத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள், பேச்சுவார்த்தைக்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்களை திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக அந்தப் பகுதி சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
மதுபானம் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: இதேபோல, வேட்டவலத்தை அடுத்த ஏர்ப்பாக்கம் கிராமத்தில் புதிதாக மதுக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்களை ஏற்றிய லாரி ஏர்ப்பாக்கம் கிராமத்துக்கு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள், லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை திறக்கக் கூடாது என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, வேறு வழியின்றி மதுபானங்களை ஏற்றி வந்த லாரி திரும்பிச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com