மதுக் கடையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை - பெரும்பாக்கம் சாலையில் உள்ளது செ.அகரம் கிராமம். இங்குள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மதுபானங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அண்மைக்காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், நகரைச் சேர்ந்தவர்கள் பலர் இங்கு வந்து சாலையோரம் மது அருந்திவிட்டு, சாலையில் செல்வோரிடம் வீண் தகராறு செய்வது அதிகரித்துள்ளதாம்.
மேலும், சாலைகளிலும், விவசாய நிலங்களிலும் மதுபான பாட்டில்கள், நெகிழிப் பைகளை (பிளாஸ்டிக்) வீசிவிட்டுச் செல்வதுடன், அந்த வழியாகச் செல்லும் பெண்களை கிண்டல் செய்கின்றனராம்.
இதனால் ஆத்திரமடைந்த
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சனிக்கிழமை மதுக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென கற்களை வீசி டாஸ்மாக் கடையை தாக்கினர்.
சாலை மறியல்: பின்னர், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெண்கள் திருவண்ணாமலை - பெரும்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் 4 நாள்கள் அவகாசம் கேட்டனர். இதைத் தொடர்ந்து, வேறு இடத்துக்கு மாற்றும் வரை கடையைத் திறந்து மது விற்பனை செய்யக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, சுமார் 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com